Tuesday, April 3, 2012

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி



இப்படித்தான் எழுதினேன்
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி


2008ம் ஆண்டு மின்சாரப்பூ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாதமிவிருதைப் பெற்றிருக்கிறார் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி. இதுவரை 26 சிறுகதைத் தொகுப்புகள், ஆறு நாவல்கள், ஆறு குறுநாவல்கள் வெளியிட்டு இருக்கிறார்.

1972ம் ஆண்டு என்னுடைய முதல் சிறுகதை வெளிவந்தது.
சிறுகதை எழுத லட்சியமோ , சிறுகதை எழுதுகிற ஆர்வமோ அதனால் பிரபலம் ஆகவேண்டும் என்ற உந்துதலோ எழுதுகிற பழக்கமோ எனக்கு எப்போதும் இருந்தது இல்லை. இலக்கியத்தில் ஈடுபடும் குடும்பமோ, பாரம்பரியமோ என்னுடையது இல்லை. உலர்ந்து போன பின்தங்கிய மாவட்டமான விருதுநகர் பக்கத்திலிருக்கும் சிறு கிராமமான மேலாண்மறை நாடு கிராமம் எங்களுடையது. மளிகைக்கடை நடத்தும் பரம்பரையில் பிறந்து வளர்ந்தவன் நான். உலர்ந்த மனம் மட்டும் இருக்கும் மனித குடும்பம் . ஈரமனசு இருந்தால் இலக்கியவாதி என்னும் நிலை. புறச்சூழல் களும் , மனச்சூழல்களும் தான் என்னை எழுத்துக்கு கொண்டு வந்தது. 5ம் வகுப்போடு அறுந்து போன கல்வியின் காரணமாக அதை ஈடுகட்ட நிறைய வாசித்தேன். கண்டதையும் படித்தால் பண்டிதன் ஆகலாம் என்பதைப் போல மூர்க்கமாக பல புத்தகங்களையும் வாசித்தேன். முற்போக்கு படைப்புகளை பலவிதங்களில் படித்த நான் சோவியத் இலக்கியங்களையும் வாசிக்கும் வரம் பெற்றிருந்தேன். ஒரு கட்டத்தில் வறுமை என்னை தஞ்சாவூருக்கு பஞ்சம் பிழைக்க அனுப்பியது. அங்கே போனேன். ஜெயகாந்தனின் யுகசந்தி சிறுகதைத் தொகுப்பு எனக்கு நம்பிக்கையின் துணையாக எனக்கு பேச்சு கொடுக்கும் நண்பனாக கையில் இருந்தது. தஞ்சாவூரில் மானம்பூ சாவடியில் அறை எடுத்துத் தங்கினேன். அய்யங்கார் கடைவீதிகளில் சரக்குகடையில் கடலை மிட்டாய், பரிசு அட்டைகள் வியாபாரமும் செய்த தருணத்தில், வயிற்றுப் பிழைப்புக்காக பஞ்சம் பிழைக்க போன இடத்தில திருவையாறுக்கே வடக்கே இருக்கிற ஈச்சங்குடியில உள்ள ஒரு கடையில வசூல் வாங்குவதற்காக காத்திருந்த நேரம் விவசாயி ஒருத்தர் உரம் வாங்க வந்திருந்தார். பணம் பற்றாக்குறை அவருக்கு. அதனால பரிசு அட்டையை கிழித்தார். வாழ்க்கையை கிழிப்பதற்கும் , இழப்பதற்கும் காரணம் சூதும் போதையும் தானே ? அதனால் அவர் கையில இருந்த காசெல்லாம் கரைந்தது. கிழித்து போட்ட குப்பைக் காகிதத்தில ஒன்றிரண்டு பரிசு எண்களும் இருந்தன. கோமாளிகளும் இருந்தனர். உள்ளதையும் இழந்துவிட்டு வெறும் சைக்கிளுடன் போன விவசாயியை கோமாளிகள் கைகொட்டி சிரிப்பது போன்ற பிரம்மை தட்டியது எனக்கு.

இது ஒரு சிறுகதையா? கவிதைக்கான பாடுபொருளா ? தெரியாது எனக்கு. அந்த சம்பவம் எனக்குள் உருத்திக்கொண்டே இருந்தது. மனதை அலைக் கழித்துக்கொண்டிருந்தது. அன்றிரவே துõங்க வேண்டிய நேரத்தில் இரவில் கையில் பேனா பேப்பர் கொண்டு அந்தசம்பவம் மனதில் ஏற்படுத்திய பாதிப்புகளை இலக்கணம் இலக்கியம் தெரியாமல் அந்த சம்பவத்தை ஒருவாராக ஏதோ எழுதுவது போல எழுதி முடித்தேன். அப்போது எனக்கு தெரிந்த பத்திரிகை புத்தகம் செம்மலர் தான். அதற்கு இந்த கதையை அனுப்பிவைத்தேன்.
இரண்டு மாதத்திற்கு பின்பு , செம்மலர் புத்தகம் என்னைத்தேடி என் முகவரிக்கு வீட்டிற்கு வந்தது. வழக்கமாக 10ம் தேதி வருகிற புத்தகம் 2ம் தேதியே வந்திருந்தது. அதை ஆவலோடு என்ன ஏதென்று புரியாமல் பிரித்துப்பார்க்க அதில் செ.பொன்னுசாமி என்ற பெயரில் பரிசு என்கிற தலைப்பில் நான் எழுதிய கதை பிரசுரமாகியிருந்தது. அதைப் பார்த்ததும் வார்த்தைகளற்ற பரவசம் எனக்குள் பரவத் தொடங்கியது. தஞ்சாவூர் கோபுரத்தின் மீதேறி கதை பிரசுரம் ஆனது பற்றி கத்தி சொல்ல வேண்டும் போலிருந்தது. அந்த பரவசத்திற்கு இணையான சந்தோசத்தை இன்றளவும் பெறவில்லை. சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது அந்த சந்தோசம் வேறானது. அந்த பரவசம் இருந்திருந்தால் அப்படியே இருந்திருப்பேன். பலரிடமும், பல நண்பர்களிடமும் ஆவலாய், ஆசையாய் காட்டினேன் பரிகசித்தார்கள். உருப்படாத ரூட்டு என்று எதிர்மறையாக ஆசிர்வாதம் செய்தார்கள். என் பரவசத்திற்க்கு நேர் எதிர் மறையான ஆசிர்வாதங்கள் கிடைத்தன. தொடர்ந்து சிலர் ஊக்குவித்தனர். அந்த சீண்டல் என்னை எழுத்தாளனாக்கியது. பணம், பரிசுகள், விருதுகள், பாராட்டுக்கள் எனக்கு துõண்டல் கள் என்றாலும் , தொடர்ந்து எழுதுவதற்கும், என்னை எழுத்தாளனாக மேலும் மேலும் செதுக்கிக் கொள்வதற்கும் சீண்டல்கள் அவசிய மாக இருக்கின்றன.

1 comment:

Unknown said...

ungal eazhuthu manadhi thaippathu.virumbi vasippen.