Tuesday, April 3, 2012
யாழினி முனுசாமி
இப்படித்தான் எழுதினேன்
யாழினி முனுசாமி
செய்யாறிலிருந்து பத்துகிலோமீட்டர் துõரத்தில் இருக்கும் மோரணம் கிராமம் எங்கள் ஊர். சரியாகச் சொன்னால் மோரணம் காடு. அந்தச் சிற்றுõரில் பாட்டிமார்கள் சொன்னகதைகள் எங்கள் திண்ணைகளில் அலைந்து கொண்டிருந்த காலம். என் சிறுவயதுக் காலம் விடுகதைகளும் , பாடல்களும் நையாண்டிகளும் எங்கள் தெருக்களில் ஒலித்துக் கொண்டிருந்தன.
செய்யாறில் சுற்றுப்புறங்களில் அப்போது பல நாடகக்குழுக்கள் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்தன. திருவிழாக் காலங்களில் முள்ளுவாடி பாலு நாடகக்குழு தொழுப்பேடு ஜானகி நாடகக்குழு செய்யாறு கன்னியப்பன் நாடகக்குழு வசந்தி நாடகக்குழு என்று பல்வேறு நாடகக்குழுக்கள் öங்கள் ஊரில் நாடகங்களை நடத்தியிருக்கின்றன. எங்கள் ஊரிலுள்ளவர்களும் நாடகம் கற்றுக் கொண்டு ஆடுவார்கள். புராண நாடகம் , சமூக நாடகம், என மாறி மாறி நடத்து வார்கள். புரிசை கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்து எங்கள் ஊரில் பிரபலம். அத்துடன் கரகாட்டம், பம்பையாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை யாட்டம், தப்பாட்டம், எனத் தெருவே களை கட்டும். ஊரில் ஒரு திருமணம் என்றால் இரண்டு நாட்களுக்கு ரேடியோ சவுண்ட் சர்வீஸில் சினிமா பாட்டு ஒலித்துக் கொண்டேயிருக்கும். இடையே விதி கதைவசனம் ஒலிக்கும். ரேடியோவிலும் தேன் கிண்ணம் கசியும்.
இத்தகைய சூழலில் வளர்ந்ததால் கலை இலக்கியத்தின் மீது இயல்பாகவே நாட்டம் ஏற்பட்டது. செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக்கல்லுõரியில் பிஏ தமிழிலக்கியம் படித்த நேரம் எல்லா மாணவர்களும் ரிசல்ட்டை எதிர்பார்க்க நான் கல்லுõரி ஆண்டு மலரை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன். ஜெ.முனுசாமி என்றிருந்த என்பெயரை பார்த்து பரவசமானேன்.என் பெயரை முதன்முதலாக அச்சில் பார்த்த தருணம் அது. இருட்டு எனும் தலைப்பில் என் கவிதை வெளியாகியிருந்தது. எங்கள் வீதிகளில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெளிச்சம் இல்லை. கண்ணகி காற் சிலம்பை கழட்டினாள் மதுரை எரிந்தது. என் தங்கை காற்சிலம்பைக் கழட்டினாள் என் வீட்டில் இன்று அடுப்பு எரிகிறது எனும் இன்னொரு கவிதையும் பிரசுரமானது. தங்கள் பெயரையும் அச்சில் பார்க்க விரும்பிய மாணவர்கள் என் கவிதைகளை வாங்கி அவர்கள் பெயரில் வெளியிட்டார்கள்.
தினமலர் வாரமலர் மற்ற பிற பத்திரிகைகளில் வந்திருந்த கவிதைகளை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தேன். இதன் காரணமாகவே பெரும்பாலும் எழுதிய கவிதைகள் எல்லாம் போலச் செய்தல் கவிதைகளாகவே இருந்தன. பிறகு அறிவொளி இயக்கத்தில் சேர்ந்து ஊர்ஊராக சென்று விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தினோம். கடிதம், பூங்கோதை போன்ற நாடகங்கள் நெஞ்சை உலுக்கிவிடும்.இதனால் கவிதையிலும் மாற்றம் ஏற்பட்டது.எனக்குப்பிடித்தது கவிஞர் மு.மேத்தாவின் கவிதைகள் அதற்காகவே மாநிலக்கல்லுõரியில் எம்.ஏ தமிழிலக்கியத்தில் சேர்நதேன். உளி எனும் கையெழுத்து பத்திரிகை நண்பர்களுடன், மு.மேத்தாவின் கையால் வெளியிட்டோம். வானொலியில் இளையபாரதத்தில் கவிதைகள் வாசித்தேன். சிற்றிதழ்கள் மூலம் என்கவிதையின் மெருகேறியது. கவிதை எது என்பதைக் கண்டடைந்தேன். உதிரும் இலை, தேவதையல்ல பெண்கள் எனும் இரண்டு கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment