Tuesday, April 3, 2012
லேனா தமிழ்வாணன்
எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்
உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர் என்கிற நாவலை எழுதிய எழுத்தாளர் என்னுடைய தாயார் மணிமேகலை . தந்தை தமிழ்வாணன் அவர்களை தமிழ்படிக்கிற எல்லோரும் அறிவார்கள். அப்படி எழுத்துக்கு மரியாதை சேர்த்த அவர்களுக்கு மகனாக பிறந்த எனக்குள்ளும் எழுத்தின் ஊற்றுக்கண்கள் இருந்தது ஆச்சரியமில்லை தான். இருந்தாலும் எழுத்துத் துறைக்கு நான் அறியாமலே வந்து விழுந்தவன். எழுத்தை துணையாக கொண்டு எழுத்துலகில் நுழைந்தவன் நான் .
அந்தக் காலத்தில் தமிழ் இலக்கிய மாணவர்கள் என்றால் மற்ற பாடங்களை பயிலும் மாணவர்களுக்கு நாங்கள் ஒரு கேலிப்பொருளாக இருந்த காலகட்டம், எங்களை கிண்டல் செய்வார்கள். அவமானப்படுத்துவார்கள். காரணம் எந்த படிப்பும் கிடைக்காதவர்கள் எடுத்து படிப்பது தமிழ் இலக்கியம் என்றே பல மாணவர்களும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். எழுத்தாளர்களையும், உயர்ந்த தமிழ்அறிஙர்களையும் கொடுத்தது தமிழ் என்பதை அவர்கள் அறிந்திருக்க வில்லை. அப்படி தமிழ்ப்பிரிவில் படித்த மாணவர்கள் என்னோடு சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் மட்டுமே. கல்லுõரி மாணவர்களுடன் காஷ்மீர் மாநிலத்திற்கு 1975ம் ஆண்டு நாங்கள் சுற்றுலா சென்றிருந்தோம். அங்கு இன்னும் அவர்கள் எங்களை மிகுந்த கேலி செய்து கொண்டிருந்தார்கள். அந்த சம்பவம் எனக்குள் மிகுந்த மனவலியையும், வேதனையையும் உண்டாக்கியது. உடனே அவர்கள் மேலிருந்த கோபம் முழுவதையும் வெளிக் காட்ட எண்ணினேன். உடனே எண்பது பக்க நோட்டில் அந்த சம்பவங்கள் எனக்குள் ஏற்படுத்திய ரணங்களை பதிவு செய்யும் நோக்கத்தில் எழுதினேன். அந்த நோட்டை நான் படித்த தஞ்சை தமிழ் பல்கலைக் கழக பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியம் அவர்களிடம் கொடுத்து விட்டேன். அதை முழுக்க படித்த அவர் என் அப்பாவிடம் உங்களுக்கு ஒரு வாரிசு கிடைச்சுட்டான்னு பாராட்டினார்.(அப்பாவும் அவரும் நண்பர்கள்) இன்றைக்கு ஒளிபரப்பாகிற நேஷனல் ஜியாகிராபிக் சேனல் அப்போது புத்தகமாக வந்து கொண்டிருந்தது. அதில் ஒரு சம்பவம் ஒருவர் வேட்டை யாடு வதற்காக காட்டிற்கு போவார். அங்கே காட்டில் ஒரு சிறுத்தை அடிப்பட்டு கிடக்கும். உடனே அதற்கு தேவையான முதலுதவிகள் வைத்தியம் பார்ப்பார். அதனோடு சில நாள் பழகுவார் . முடிவில் அந்த காட்டைவிட்டு தன் ஜீப்பை எடுத்துக்கொண்டு புறப்படுவார். அப்போது பின்னாலேயே அந்த சிறுத்தையும் தொடர்ந்து வரும். இந்த சம்பவம் என்மனதை மிகவும் பாதித்தது. உடனே அதை தமிழில் மொழி பெயர்த்து என் அப்பாவிடம் காட்டினேன். அது பதினைந்து நாட்களாக அப்படியே மேஜையில் இருந்தது.அவர் படித்தாரா? இல்லையா?என்று தெரியவில்லை. அப்பா நம்மை கண்டுகொள்ளவில்லையே என்கிற கேள்வி எனக்குள் எழுந்தபடி இருந்தது. அப்பா 1948லிருந்து 1977வரை 29 ஆண்டுகள் கல்கண்டு பத்திரிகையை நடத்தியவர். அந்த கட்டுரையை நான் மொழி பெயர்த்த போது பியூசி படித்துக் கொண்டிருந்தேன். லெட்சுமணன் என்கிற என்னுடைய இயர் பெயரில் அந்த
கட்டுரை பதினைந்து நாட்கள் கழித்து கல்கண்டு பத்திரிகையில் வெளிவந்திருந்தது. அதைப் பார்த்ததும் பக்கங்களை புரட்டினேன். அச்சில் என்பெயரில் அந்தக்கட்டுரை வெளிவந்திருந்தது. அதைப் பார்த்ததும், வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது போன்ற சந்தோஷம் எனக்குள் உற்சாகமாக தொற்றிக் கொண்டது. வாசகர்கள் நிறைய பேர் கடிதம் எழுதியிருந்தார்கள். அவைகளைப் பார்த்ததும் மேலும் பரவசம் தொற்றிக் கொண்டது. அதற்கு சன்மானமாக எனக்கு பதினைந்து ரூபாய் பணம் வந்தது. சிண்டிகேட் வங்கியில் மாணவர்கள் சேமிப்பு திட்டம் என்று ஒரு திட்டம் இருந்தது. அதில் செலுத்தினேன். அந்தபணத்தை பார்த்ததும் எனக்கு முதலில் தோன்றியது. இந்த காசில் ஐந்து சினிமா பார்க்கலாம் என்பது தான். அப்போது சினிமாவுக்கான கட்டணம் ரூபாய் 2.75பைசாதான்.ஆரம்பத்தில் தொடர்ந்து நிறைய மொழி பெயர்ப்பு கட்டுரைகள் தான் எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு சொந்தமாக எழுத வேண்டும்,சிந்திக்க வேண்டும் என்கிற சிந்தனை வந்தது. எழுத்துலகில் என்னுடைய தேடல் அதிகமானது. அதன்மூலம் என் எழுத்து நடையை மாற்றிக் கொள்ள தீர்மானித்தேன். கதைகள் நாவல்கள் என்று எடுத்துக் கொண்டால் மற்ற வர்களுக்கு முன்பு நான் பின் தங்கி விடுவேன்.என் கவனத்தை வாழ்க்கை சார்ந்த பயணக் கட்டுரைகளிலும், துவண்டு கிடக்கும் மனிதர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்தும் தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுவதிலும் என் முயற்சிகளைக் காட்டினேன். எனக்கான பாதையை அது தீர்மானித்து கொடுத்தது. 1977ல் அப்பா இறந்தபிறகு கல்கண்டு பத்திரிகையை தொடர்ந்து யார் நடத்துவது? யாரிடம் பொறுப்பைக் கொடுக்கலாம் என்கிற கேள்வி எழுந்தபோது குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி அவர்கள் லேனா தான் அந்தப் பொறுப்பை கவனிக்க போகிறார். தமிழ் வாணனுக்குப் பிறகு அந்த இடம் லேனா தமிழ்வாணனுக்குத் தான் என்று என்னை அனுமதித்தார். அப்போது நான் சென்னை சட்டபல்கலைக்கழகத்தில் சட்டபடிப்பு(பி.எல்) படித்துக்கொண்டிருந்தேன். அப்பாவிற்குப்பிறகு பத்திரிகை துறைக்கு வரவேண்டியிருந்ததால் படிப்பை பாதியில் விட வேண்டியதாகிவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment