Tuesday, April 3, 2012

கவிஞர் லலிதானந்த்



கவிஞர் லலிதானந்த்
எனக்கு சொந்தஊர் துறையூர் மாவட்டம். பெரம்பலுõர் சாலையில் இருக்கிற நாகலாபுரம். அப்பா சிதம்பரம், அம்மா விஜயா . எங்களுடையது விவசாயக் குடும்பம். அப்பா கையில மண்வெட்டியை கொடுத்த காலம், என் கையில பேனாவைக் கொடுத்தது. அப்பாவோட கனவு பையன் ஆபீஸ் உத்தியோகம் மாதிரி டேபிள்ல உட்கார்ந்து எழுதி சம்பாதிக்கணும்னுங்கறது தான். பத்தாவது, பணிரெண்டாவது படிக்கறப்பவே எனக்கு கவிதைகள்ல ஆர்வம் உண்டு. படிக்கிற காலத்தில வகுப்புல மத்த பசங்க வீட்டுப் பாடங்களையும், கணக்குகளையம் எழுதறப்ப நான் கவிதை எழுதிக்கிட்டிருப்பேன். அப்படி ஒரு முறை நான் கவிதை எழுதிக்கிட்டிருக்கிறதைப் பார்த்த எங்க கிளாஸ் டீச்சர் நோட்டை வாங்கிப் பார்த்துட்டு படிச்சு பார்த்தாங்க. நான் வறுமைங்கற தலைப்புல மரத்தடியாவது கிடைத்ததே என நாங்கள் மகிழும் போது தான். இங்கு இலை யுதிர் காலத்தின் ஆரம்பம்னு எழுதியிருந்தேன். அதைப் படிச்சுட்டு பாராட்டினதோட, பசங்களுக்கும் வாசிச்சு காட்டி கைதட்டல் வாங்கிக் கொடுத்தாங்க. அந்த கைத்தட்டல் தான் எனக்கு ஊக்கம் கொடுத்தது. தொடர்ந்து தரிசனம்ங்கற தலைப்புல நடைசாத்தும் நேரம் தெரியாமல் சென்று, பெருங்கதவுகள் மூடிய ஆலய வாசலில், அர்ச்சனைக்கு எடுத்துப்போன தேங்காய்ப்பழத்துடன், ஏமாந்து நிற்பவனின் எதிரில், பசியுடன் கை நீட்டுகிற பார்வையற்ற மூதாட்டி இறைவனாகவும் இருக்கலாம்னு. ஒரு வயதான மூதாட்டி கோயில் வாசல்ல பிச்சை எடுக்கறதை வெச்சு எழுதியிருந்தேன். இப்படி தொடர்ந்த என் முதல் கவிதை பாக்யாவில வந்தது. பிறகு ஆனந்த விகடன் எழுபதாவது ஆண்டு விழா இளம்கவிஞர்கள் போட்டியில வைரமுத்து, வாலி தலைமையில வருகிறது இன்னொரு தேர்தல்னு கவிதை வாசிச்சேன். அதிலும் பரிசு கிடைச்சது. தினமலரின் வாரமலர்லயும் கவிதைகள் வந்தது.

பணி ரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பலமுறை சென்னையிலிருக்கிற அக்கா வீட்டுக்கு வந்து தங்கி சினிமா வாய்ப்பு தேடுவேன். திரும்பவும் ஊருக்குப் போயிடுவேன். பிளஸ்டூ முடிச்ச பிறகு தஞ்சாவூர்ல போய் சாமியப்பா கூட்டுறவு பயிற்சி நிறுவனத்தில டிப்ளமோ கோ ஆப்ரேட்டிவ் படிச்சேன். அப்பறம் தமிழ் இலக்கியத்தின் மேல் இருந்த ஆர்வத்தில, கவிதைகள்ல நல்ல பேர் வாங்கணும்னு பி.ஏ தமிழிலக்கியம் படிச்சேன். சென்னை வந்து வேலை பார்த்த போது எழுத்தாளர் பட்டுக் கோட்டை பிரபாகர்கிட்ட வசன உதவியாளராக சேர்ந்தேன். ஆறுவருடங்கள் வேலை பார்த்தேன். தொடர்ந்து எழுதின கவிதைகள்ல போராட்ட எச்சரிக்கைங்கற தலைப்புல உன் பாத்திரத்தில் பூக்களையும், பனித் துளிகளையும் பரிமாறினேன். உன் பசி அடங்கவில்லை. என் வியர்வைத்துளிகளை பரிமாறினேன். ருசிப்பதை நீ நிறுத்தவில்லை. என் கண்ணீரைப் பறிமாறினேன். போதுமென சொல்லவில்லை. என் எச்சிலைப் பரிமாறினேன். சப்புக் கொட்டினாய். பசியை பரிமாறினேன். உனக்கு அடங்கவில்லை. என் கோபத்தை பரிமாறுவதற்குள் பசி தீர்ந்துவிட்டதாக நீ நடித்தாலாவது நல்லதுன்னு, ஒரு தொழிலாளி அவனைச் சுரண்டிப்பிழைக்கும் முதலாளியைப் பற்றிய உக்ஷீவைத்தொழிலாளியின் கோபம் கொப்பளிக்க எழுதினேன். பலரின் பாராட்டை வாங்கிக் கொடுத்தது. இப்படி பல பத்திரிகைகள்லேயும் என் கவிதைகள் வந்துகிட்டிருந்தது. அவர் மூலமாக பல எழுத்தாளர்கள், இயக்குனர்களோட அறிமுகம் கிடைச்சது. சத்ய ஜோதிநிறுவனம் தயாரிச்ச வரம் டிவிசீரியல்ல முதல் பாடல் எழுத வாய்ப்பு கிடைச்சது. வாழ்க்கையில ஒவ்வொரு கட்டமும் வரம்தான்ங்கற மாதிரி அந்தப்பாட்டும் அமைஞ்சது. அப்பறம் எழுத்தாளர் சுபா வின் அறிமுகத்தால் இயக்குனர் சி.ஜே.பாஸ்கரோட அறிமுகம் கிடைச்சது. பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை சீரியல்களுக்கு வசனப் பணிகளும், பாடல் எழுதுகிற வாய்ப்புகளும் தொடர்ந்தது. பல பத்திரிகைள்ல வந்த என்னுடைய கவிதைகளைத் தொகுத்து ஒரு எலுமிச்சம் பழத்தின் வரலாறு, லெமூரியாவிலிருந்த காதலியின் வீடு னு இரண்டு தொகுப்புகள் வெளி வந்திருக்குது. அதற்கும் வாசகர்கள்கிட்ட நல்ல வரவேற்பும் , பெயரும் கிடைச்சது. சீரியல் வசனத்தில் என்னை அறிந்த இயக்குனர் எம்.பிரபு அதே நேரம் அதேஇடம் படத்தில வசனத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். என் கவிதைகளை படிச்சுட்டு , பிரேம்ஜி அமரன் இசையில பாடலாசிரியர் வாய்ப்பும் கொடுத்தார். தொடர்ந்து திருதிரு துருதுரு படத்திற்கான பாடல்கள் வாய்ப்பு வந்தது. இப்போது அந்தபடம் ஓடிக்கிட்டிருக்கு.

No comments: