Monday, April 23, 2012

இவர் கையில் கிடைக்கும் எல்லாம் சிற்பம் தான்!






சமையலும் ஒரு கலை என்பார்கள். அதில் நிஜமாகவே கலைநுட்பம் தெரிந்த ஒருவர் இருந்தால் நிச்சயம் சமையலு<ம், கலையும்  மணக்கும்  இல்லையா? அப்படி இவர் கையில் கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் சிறந்த கலையாகி விடுகிறது. கோடம்பாக்கத்தில் தற்போது காகித பொம்மைகள் செய்யும் தொழிலில்  ஈடுபட்டு வருகிறார்கள் வீரராகவன், நமச்சிவாயம் என்ற சகோதரர்கள் இருவரும் அவர்களைச் சந்தித்தோம்.
""அப்பா கோவிந்தராஜுலு களிமண்ணில்  பொம்மைகள் செய்தவர். ஆரம்பகாலத்தில் டெலிபோன் துறையில் பணிபுரிந்தவர். அவருக்கு நாங்கள் மொத்தம் ஒன்பது பிள்ளைகள். அதில் இரண்டு ஆண்கள் ஏழு பெண் குழுந்தைகள். அதில் ஒரு சிலரைத் தவிர மற்ற பிள்ளைகள் அனைவரும் இதே தொழிலைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் கொஞ்சம் மாற்றமாக இப்போது காகித பொம்மைகள் தயாரிக்கிறோம். ஆனால், ஆரம்ப காலத்தில் நானும் தம்பியும் எம்.காம்  படித்து விட்டு கேட்டரிங் பட்டயப்படிப்பை படித்தபிறகு, நாங்கள் இருவரும் கப்பலில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பலவருடங்கள் பணிபுரிந்தோம். தம்பிக்கு கடலும், குளிரும் ஒத்துவரவில்லை. அவன் சென்னை திரும்பி ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் வேலைப்பார்க்க, நான் பிரயாணிகள் கப்பலில் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கும் பயணம் செஞ்சேன். அப்படி பயணம் செய்ததில் இந்தி, தமிழ், ஆங்கிலம் என மற்ற நாட்டு மொழிகளை கொஞ்சம் தெரிஞ்சு வெச்சுக்கிட்டேன்.  அங்கே கப்பலில் கேட்டரிங் கில் பணிபுரிந்த போது சமயத்தில் எங்களுக்கு காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள், ஐஸ்கட்டிகளில் சிற்பம் செதுக்கச் சொல்வார்கள். அதில் எனக்கு சிறுவயதிலிருந்தே கலை சம்பந்தமான விசயங்களில் இருந்த ஆர்வம் ஊறிப்போனதால் எனக்கு சமையலும், கலையும் கைவந்த கலையாகிவிட்டது. குளோரைடு வாட்டரான கண்ணாடி போன்ற ஐஸ்கட்டியை கொடுத்து இருபது நிமிடத்தில் சிற்பம் செதுக்கச் சொல்வார்கள். சமயங்களில் கண்காட்சிகள் நடக்கும். ஓட்டல்களில் விழாக்கள் இருக்கும். அங்கு வரும் பார்வையாளர்கள் ரசிக்க வேண்டி இந்தப்போட்டிகளை நடத்துவார்கள். அதில் நான் கோல்டு மெடல் வாங்கியிருக்கிறேன்.  சமைக்கும் போதும், பிறகு பரிமாறும் போது அது அழகுபட இருந்தா இன்னும் அழகா இருக்கும் இல்லையா? அப்படிப்பட்ட விசயங்களை அங்கே நிறைய செய்ய முடிஞ்சது. அப்படி எங்களுடைய சிற்பங்களை ஐஸ்பார், வெண்ணெய்(பட்டர்), பிரட், வான்கோழி இறைச்சி, முட்டை, தெர்மகோல், மெழுகு,ஜெலட்டின் குச்சிகள், காய்கறிகள், பழங்கள்ல செய்திருக்கிறோம். ஐஸ்பாரைப்பொருத்தவரை அது ஹார்டாக இருந்தாக்க சிசில் வெச்சு பொறுமையாக செதுக்கும் போது நமக்குத் தேவையான உருவத்திற்கு செதுக்க முடியும். சிலசமயம் நொறுங்கவும் செய்யும். நாம் எதிர்ப்பார்க்கிற உருவம். அளவு மாறவும் வாய்ப்பிருக்கு. சிலசமயம் அளவு குறையும் போது அதுக்கேத்தமாதிரி வேறு உ<ருவங்களை செதுக்கிடுவோம். தண்ணீரிலயே   நிறங்களை கலந்து  ஐஸ்பார் தயாரிச்சு  வரும். அது பொன்னிறமாக வரும். இங்கே இந்தியாவில் கிடைக்கற ஐஸ் சுத்தமாக இருக்காது. வெளிநாடுகளில் கிடைக்கறது மறுபக்கம் கண்ணாடி மாதிரி தெரியும். கப்பல்லயோ, ஓட்டல்லயோ பார்வையாளர்கள் முன்னே செய்யும் போது அதிகபட்சம் இருபது நிமிஷம் நேரம் மக்கள் பொறுமையாக  ரசிப்பாங்க. அதற்குள்ளே ஒரு சிற்பத்தை செய்து காட்டிடணும். பிறகு ஐந்து மணிநேரம் முதல் மூணு நாள் கூட காட்சிக்கு வெச்சிருப்பாங்க. ஐஸ்பார்ல செதுக்கணும். பட்டரைப்பொறுத்தவரை மெட்டல்ல பிரேம் பண்ணிட்டு அப்ளை செய்யணும். காய்கறிகள் பொருத்தவரை காய்கறிகள், பழங்கள்லேயே அதுக்கான உருவங்கள் ஒழிஞ்சிருக்கும். உதாரணமாக கத்தரி உடலுக்கும், தலைக்கு ஆரஞ்சும், கைக்குகேரட்டும், கண்ணுக்கு திராட்சையும் பொருந்தும்.  தர்பூசணிப்பழத்தில மனித முகம், உருவங்களை செதுக்கமுடியும். பிரட்டை பொருத்தவரை அதுக்குன்னு தனி வகை பிரட் ஹார்டாக இருக்கணும். அதை திரும்ப பயன்படுத்த முடியாது. அப்பறம் நான் வெஜ் அயிட்டங்கள்ல வான் கோழி, பெரிய இறால், முட்டை மூலமாகவும் அலங்காரம் செய்வோம். அதை குறிப்பிட்ட நேரம் வெச்சிருந்து பரிமாறிடுவோம். ஆறிடிச்சுன்னா நல்லா இருக்காது. வெளிநாட்டில மீன்முட்டைன்னு ஒண்ணு தனியாக கிடைக்கும் அது அதிக டாலர் விலை உள்ளது. இப்படி சாப்பிடுகிற , பார்க்கிற , கிடைக்கிற  பொருட்கள் எல்லாத்திலும் புதைஞ்சு கிடக்கிற கலைப்பொக்கிஷங்களை மக்கள் பார்வைக்கு வைக்கிறோம். இதை நாங்க சொல்லித்தர ஆர்வமாக இருக்கிறோம்.   அதையே இங்கே கேட்டரிங் படிப்புகள்ல ஒரு கோர்சாகவும் சேர்க்கலாம். என்னைப்பொருத்தவரை எங்கள் வீட்டில் கலையுடன் நாங்கள் வளர்ந்ததால் எனக்கு அது சுலபமாக கை வந்த கலையாக ஆனது. படிக்கும் பலருக்கும்  கற்றுக்கொள்ளும் போது , இது அவர்களது திறமையை மேலும் மெருகூட்டப் பயன்படும். வீட்டிலிருக்கும் பெண்களும் கூட இதை கற்றுக் கொள்ளலாம். அவர்கள் தங்கள் வீட்டில் நடக்கும் சாதாரண விழாக்களில் கூட வாசலில் கோலம் போட்டு அழகுபடுத்துவது போலவும், திருமணத்திற்கு வீட்டில் வாழைமரம் , தோரணங்கள் கட்டி அழகு படுத்துவது போலவும் உணவுகளையும், பழங்களை  அழகு படுத்தி அசத்த முடியும். என்கிறார்கள் சகோதரர்கள் இருவரும். 

No comments: