Tuesday, April 3, 2012

ஷ்!..இப்பவே கண்ணைக் கட்டுதே!




வீட்டில் நடக்கிற அன்றாட பிரச்சினைகளுக்கு நடுவில் அதாவது கணவன் வெர்சஸ் மனைவிக்கிடையில் இருக்கும் நடைமுறை புரிதல் பிரச்சினைகளுக்கு இடையில் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள், வீட்டு ஓனர்களால் வரும் அவர்களிருவக்குள்ளும் புதிதாக முளைக்கும் பிரச்சினைகளை இங்கே அலசுவோம்.
அப்போது தான் மிகசமீபத்தில் திருமணமாகி இருபது நாட்கள் ஆகிறது அந்த ஜோடிகளுக்கு . அவள் அச்சு அசல் கிராமத்துப்பெண். அவரோ நகரத்து வாழ்க்கையோடு பொருந்திப்போனவர். காரணம் படித்தது வேலைபார்ப்பது எல்லாம் நகரத்திலேயே என்பதால் நகரத்தின் வாசம் அவருக்கு பழகிப்போனது ஒன்றாகிவிட்டது. ஊருக்கு போவதென்றால் ஏதோ வெளியூருக்கு சுற்றுலா போய்வருவது போல இருந்திருக்கிறது அவருக்கு. சரி இருக்கட்டும். வீட்டிலோ புது மனைவி அவளிடம் கதவை பூட்டிக்கொள். யார் வந்து எது கேட்டாலும் தேவையில்லாமல் பேசாதே . கதவை உள் பக்கம் பூட்டிக்கொள். இங்கே திருடர் பயம் அதிகம். தண்ணீர் கேட்பார்கள், உங்களுக்கு கடிதம் என்பார்கள், தண்ணீர் தொட்டிக்கு கொசுவலை போடுகிறேன் என்பாதர்கள் இப்படி யாராவது ஒருவர் வந்து தொந்தரவு தந்து கொண்டிருப்பார். நீ எனக்கு வேலை இருக்கிறதென்று சொல்லி அவர்களை தட்டிக்கழித்து விடு தேவையில்லாமல் பேச்சு வளர்க்காதே. அப்படி வளர்த்தால் நீ கிராமத்து ப்பெண் என்று கண்டுபிடித்து ஏமாற்றி கையில் அகப்பட்டதை பறித்துக் கொள்வார்கள் என்று எச்சரிக்கை செய்து விட்டு , அப்பாடா! என்ற பெருமூச்சுடன் வேலைக்கு ஹாயாக பைக்கில் பறந்தார் அவர். கணவரை வழியனுப்ப வந்தாள் மனைவி. கணவர் சென்றதும் வீட்டு ஓனரின் மனைவி வந்து பேச்சுக்கொடுத்தாள்.குடும்பம் , படிப்பு மற்ற விவரங்களை கேட்டறிந்தால் அப்போது ஒரு வாலிபன் டிப்டாப்பான உடையில் (சேல்ஸ்ரெப்) வந்தான்.
""மேடம் ,ரெண்டு நிமிஷம் பேசலாமா?'' என்றுவிட்டு , தான் கொண்டு வந்திருந்த வாட்டர் பில்டரைபற்றி மிகவிரிவாக பேசிக்கொண்டிருந்தான். கடைசியில் மேடம் கம்பெனியே நேரடியாக கடையில்லாம வீடுகளுக்கு கொண்டு வந்து தர்றதால விலைகுறைவாக டிஸ்கவுண்ட்ல தர்றோம். அதுவும் ரெண்டு சேர்த்து வாங்குனீங்கன்னா இன்னும் கொஞ்சம் குறைச்சு தர்றேன் என்றதும் வீட்டு ஓனருக்கு அடித்தது அதிர்ஷ்டம் என்று எண்ணியிருக்கிறார். அந்த புதுப்பெண்ணிடம் உன் வீட்டில் தான் இல்லையே நீ வாங்கிக் கொள்ளலாமே ? தண்ணீர் சுத்தமாகும் . தினசரி மெட்ரோ தண்ணீரை பிடித்துப்பார் துரு, கழிவு நீர் கலந்திருக்கும். திருமணம் ஆகியிருக்கிறது. நாளைக்கு கற்பிணியானாள் உனக்கு சுத்தமான தண்ணீர் குடிக்கத்தேவைப்படும் வாங்கி வை பயன்படும் என்றிருக்கிறாள்.
இல்லைஅவர் வந்ததும் கேட்டு தான் வாங்கணும்.என்று அவள் சொல்ல,
என்னம்மா பொண்ணு நீ, நான் சொல்லிக்கிறேன். உன் புருஷன் ஒண்ணும் சொல்லமாட்டார்.
பணம் ? வேணுமே..
என்னம்மா இவ்வளவு அசடா இருக்கே. வீட்டுச்செலவுக்குக்கூட பணம் வேணும்னு கேட்டுவாங்கிக்க மாட்டியா? இதைப்பாரு இதை கடையில வாங்கினா காசு அதிகமாகும். இங்கே இவ்வளவு கம்மியா கிடைக்குது. யார் கொடுப்பா.இதெல்லாம் நாமதான் முடிவெடுக்கணும். வீட்டுக்கு எது தேவைன்னு நாமதான் பார்த்து வாங்கணும் என்று சொல்லியிருக்கிறார். பிறகு இரண்டுக்கும் சேர்த்து நான் பணம் தர்றேன் அவர் வந்ததும் மெதுவாக்குடு போதும். இப்ப ஒண்ணும் அவசரம் இல்லை.
என்று பணம் கட்டி இரண்டையும் வாங்கி ஒன்றை அவள் தலையில் கட்டியிருக்கிறாள்.
போம்மா ! போய் இப்பவே தண்ணீரை வடிகட்டி வீட்டில் வையி. எல்லாத்துக்கும் ஆம்பளைங்கள எதிர்ப்பார்க்கக் கூடாது. சுயமாக எப்போதான் முடிவெடுக்கறது. என்று சொல்லிவிட்டு அடுத்த அரைமணி நேரத்தில் அதில் தண்ணீரை வடிகட்டி எவ்வளவு அருமையா தேவார்மிர்தமா இருக்கு தண்ணீர் என்று சப்புக்கொட்டி குடித்தபடியே பேசியிருக்கிறார் ஓனர் பெண்.
புதுப்பெண்ணுக்கோ வயிற்றில்புளியைக்கரைத்தது.
அதைப்போலவே மாலையில் கணவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். வந்து பார்த்ததும். வீட்டில் எதுவோ புதிதாக இருப்பதாக தோன்றியிருக்கிறது. ஆனாலும், புருடபடவில்லை. மனைவி தண்ணீர் பிடித்து தந்திருக்கிறார்.அதைக்குடித்த கணவர் தண்ணீர் ருசி வித்தியாசம் இருப்பதாக கேட்க. அப்போது தான் புதிதாக வாங்கி வைத்த வாட்டர் பில்டரைக்காட்டியிருக்கிறார்.
யார் வாங்கினா.. ?
நான்தாங்க..
யார் உன்னை வாங்க சொன்னா?
வீட்டு ஓனர் தான்.
இதற்கு முன்பு திருமணமாகாமல் இருந்தநேரத்தில் இப்படி பல தொந்தரவுகள் கொடுத்தும் அதில் சிக்காத அவன் . தற்போது தன் மனைவி அவளின் பொருள் வாங்குகிற ஆசை வலையில் விழுந்ததை எண்ணி கோபம் தலைக்கேற மெனமாக இருந்தான்.....விளைவு வீட்டு ஓனர் பெண்ணுடன் தகராறாக வெடித்தது..
அது அடுத்தவாரம்....

2.ஷ்! இப்பவே கண்ணைக்கட்டுதே!

அவங்க சொன்னாங்கன்னு நீ எப்படி வாங்கலாம். நீ நான் அவர் கிட்ட கேட்டு வாங்கிக்கறேன்னு சொல்லவேண்டிய தானே? நீ ஏன் அந்தம்மா சொல்லுதுன்னு வாங்கறே? அது எதெடுத்தாலும் இப்படித்தான் தலையில கட்டும். நாளைக்கே வந்து பார் எனக்கு அவசர செலவிருக்கு பணம் குடும்மான்னு கேட்கும் இல்லைன்னா வாடகை கொடுக்கற அன்னைக்கு பிரச்சினை பண்ணும்.இதெல்லாம் தேவையா? ஒரே பதில் எங்களுக்கு இப்ப வேண்டாம். அவர் வந்ததும் கேட்டுட்டு வாங்கிக்கறேன்னு சொல்லியிருக்கலாம்.

அந்தம்மா தான் நான் சொல்லிக்ககிறேன்னாங்க..
என்கிட்ட சொல்லிக்கறதுக்கு அவங்க யாரு?
எங்க அம்மாவா, இல்லை என்மாமியாரா?சிபாரிசு பண்றதுக்கு? இதெல்லாம் அவங்களுக்கு தேவையில்லாத வேலை. அவங்க ளுக்கு தேவையில்லாத விசயம் இது. அவங்க வீட்டு முடிவை நாம எடுத்தாக்க அதை கேட்டுப்பாங்களா இல்லை
ஏத்துப்பாங்களா?
என்று வெடித்துக்கிளம்பிய பிரச்சினை பிறகு அடுத்தடுத்த நாட்களில் வளரத்தொடங்கியது. பிறகு வீட்டு ஓனரிடம் பிரச்சினையாகவே வெடித்தது.
தம்பி பணம் குடுப்பா.
என்னபணம்?
வாட்டர் பில்டர் பணம்பா..இப்போ இல்லை
எனக்கு அவசர செலவிருக்கே..
இப்போ என்கிட்ட இல்லை.


இப்போ என்னதான் சொல்றே?
என்கிட்ட பணம் இப்போ பணம் இல்லைங்க.
எப்போதான் தருவே.
தர்றப்ப வாங்கிக்கங்க.
தர்றப்பன்னா.. வாட்டர் பில்டர் வாங்கிக்ககிட்ட இல்லை.
நான் வாங்க சொன்னேனா?
இல்லைப்பா விலைகம்மியா கிடைச்சுதேன்னு நான் சொல்லி வாங்கச்சொன்னேன்.என்கிட்ட பேசிக்கறதுக்கு நீங்க யாரு?நீங்க எதுக்கு என் குடும்பத்துக்கு தேவையான பொருளுக்கு சிபாரிசு பண்றதுக்கு?உங்க குடும்ப விசயத்தில நான் தலையிடறேனா?நீங்க ஏன் தேவையில்லாம மூக்கை நுழைக்கறிங்க. வேணும்னா அதை எடுத்துக்கிட்டு போகயிடுங்க. என்று கோபமாகவே அவன் பேச..
பொழங்குனது பொலங்கிட்டே நான் உனக்கு கல்யாணத்துக்கு சீர் பண்ணினதா நினைச்சுக்கறேன்.நீயே வெச்சுக்கோ!
அப்படி எனக்கு தேவையில்லங்க என்றவனிடம்..
மனைவி அழைத்து எதற்கு தேவையில்லாத பிரச்சினை நான் அப்பவே மறுத்திருக்கணும் என்மேலயும் தப்புதான். அந்தப்பணத்தை எங்க அப்பாக்கிட்ட வாங்கிக் கொடுத்திடறேன். இப்ப அந்தபணத்தை அவமுகத்தில விட்டெறிங்க. வீட்டை காலி பண்ணச்சொன்னா அது பெரிய தொல்லையா போயிடும்.என்று பயந்து புலம்பியிருக்கிறாள். அந்தப்பிரச்சினைக்கு நொந்து கொண்டு பணத்தை தொலைத்ததோடு ஷ்! அப்பாடா என்று வேலைக்குப்போகத்தொடங்கியவனுக்கு அடுத்து டென்ஷன் தரும் பிரச்சினை ஒன்று ஆரம்பிக்கத் தொடங்கியது.

No comments: