Tuesday, April 3, 2012

கீதாராணி


இப்படித்தான் எழுதினேன்!

கீதாராணி.

இதுவரை 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 135 நாவல்கள், 6 சிறுகதை தொகுப்பு, 2 கவிதை தொகுப்பு, 1999ம் ஆண்டு தாயின் சிறகினிலே எனும் சிறுகதைக்காக தமிழக அரசின் சிறப்பு பரிசு, 2000ம் ஆண்டின் சிறந்த புதினத்திற்காக தமிழக அரசின் தமிழ்ச்சங்கப்பலகை வாயிலாக தமிழக முதல்வரால் குறள்பீடப் பாராட்டிதழ் இன்னும் நிறைய பரிசுகள், விருதுகள் பெற்ற இரா. கீதாராணிதான் இந்த வார எழுத்தாளர்.
என்னோட சின்ன வயசுலேயே அம்மா அப்பா இறந்துட்டாங்க. நான் வளர்ந்தது அம்மா வழி தாத்தாவின் அரவணைப்பில்தான். எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் ரொம்ப பிடிக்கும் என்பதால், எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டேயிருப்பேன். வகுப்பிலும் அந்தளவிற்கு யாருடனும் கலகலப்பாக பழகும் இயல்பு எனக்கு கிடையாது.
தாத்தா... புலவர் திருக்குறள். சி. ராமசாமி. தாத்தா திருக்குறள் விளக்கவுரை, சொற்பொழிவு ஆற்றுவதற்காக பல இடங்களுக்குச் செல்வார். தாத்தாவைப் பார்த்து வளர்ந்ததால், இலக்கியம் மீது தானாகவே ஆர்வம் தொற்றிக்கொண்டது. 1989ம் ஆண்டுகளில் என் பள்ளி நாட்களிலேயே எழுதுவதற்கு ஆரம்பித்துவிட்டேன். ஆனால், எல்லாமே எனக்கு நானே எழுதிக்கொண்டேன். அதை திருப்பி திருப்பி படித்துப் பார்த்து திருப்தி பட்டுக்கொள்வேன்.
முதன்முதலாக 1994ம் ஆண்டு "வா இனி வசந்தமே' என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுதினேன். அந்த நாவலை தேவியின் கண்மணி மாத இதழுக்கு அனுப்பினேன். அந்தக் கதை அதே ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்தது. கதை வெளிவந்த அந்த நாள் என்னால் மறக்க முடியாத நாளாகத்தான் இன்றுவரை உள்ளது.
என்னுடைய எழுத்தையும் வாசகர்கள் விரும்பிப் படித்து, என்னை அங்கீகரித்த முதல் நாவல் அது. என்னுடைய எழுத்திற்கு கிடைத்த முதல் விமர்சகர் என் தாத்தாதான். அவர் என்னுடைய நாவலைப் படித்து நெகிழ்ந்து போய் பாராட்டி கண்ணீர் மல்கி கசிந்துருகின காட்சிதான் எனது ஒவ்வொரு படைப்பிற்கும் உந்துதலாய் அவரின் ஆசியில் ஜனரஞ்சக வரவேற்பு மிக்க ஒன்றாய் இன்று எழுத்துத் துறையில் தனித்த வெற்றியைத் தேடித் தந்துள்ளது என்றும் சொல்லலாம்.

No comments: