Monday, April 23, 2012

ஸ்ரீரங்கத்து விஐபிகள்



ஸ்ரீரங்கத்தைப் பொறுத்தவரை ராஜகோபுரத்தைப்போல  வாழ்வில் உயர்ந்த மனிதர்களுக்கும், பிரபலங்களுக்கும்  பஞ்சமில்லை எனலாம். இலக்கியத்திலும், சினிமாவிலும் சாதித்தவர்கள் வாலி,சுஜாதா போன்றவர்கள். எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய மலரும் நினைவுகளாக  ஸ்ரீரங்கம் பற்றி எழுதும் போதெல்லாம் மறக்காமல் குறிப்பிடும் பெயர்  கே.வி.சீனுவாசன். காரணம் சுஜாதாவின்  பால்ய நண்பர். கே.வி .எஸ்  ஸ்ரீரங்கத்தில் சமூக நல சேவைகள் செய்து வருகிறார். அதில் குறிப்பிட வேண்டியது ஊரைவிட்டு வந்து அனாதையாக இறந்து போகிறவர்களை கண்டெடுத்து அவர்கள் வீட்டிற்கு தெரியப்படுத்தி நல்லடக்கம் செய்யும் சேவையில் ஈடுபட்டுவருகிறார்.  சுஜாதாவைப்பற்றி அவர் சொல்லும் போது " ஒரு நல்ல நட்பு எங்களுடையது. அந்தநட்பு இப்போது நினைத்தாலு<ம் அடிக்கரும்பின் இனிப்பு நாவின் அடியில் தங்கியதைப்  போல உணர முடிகிறது. கிரிக்கெட்டில் நான் மிகவும் ஈடுபாடு. பலமாட்ச்சுகள் விளையாடி ஜெயித்துள்ளோம். நாங்கள் இருந்த கீழச்சித்திரை வீதியில் இருந்து மேல அடையவளஞ்சான் , கீழ அடையவளஞ்சான் '  என வீதி மாட்ச்சுகள் விளையாடு வோம்.  அந்தந்த தெருப்பையன்கள்  அவர்கள் தெருவிற்காக  விளையாடுவார்கள். நாங்கள் ஜெயித்தாலும், அடிவிழும் (எதிர் அணியினர் சோகத்தில் அடிப்பார்கள் ),தோற்றாலும் அடிவிழும் (ஜெயித்த மகிழ்ச்சியில் அவர்கள் அடிப்பார்கள்) ஆனால், அடிவிழுவது என்னவோ நிச்சயம்.  எங்கள் தெருவில் இருந்த ஒரு பெட்டிக்கடை பின்புறம் உட்கார்ந்து நாங்கள் கர்னாடக சங்கீதக்கச்சேரியை செய்வோம். ஜாதாவின் பாட்டி மிகவும் கண்டிப்புக்காரர் . சுஜாதா எந்த ஒரு சிறிய விஷயத் தையும் கூர்ந்து கவனிப்பார்.  நகைச்சுவையாக அதனை எங்களிடம் விவரிப்பான். அவரோடு பேசுவதே டானிக் சாப்பிட்டமாதிரி இருக்கும்.  அவர் இறப்பதற்கு முன் ஸ்ரீரங்கம் வந்திருந்தார். " என்ன கே.வி இன்னொரு மாட்ச் விளையா டலாமா? இந்த தடவை 65வயதுக்கு மேற்ப்டடவர்கள்  தான் நம் டீமில்  விளையாடலாம் என்று  குறும்பாகச்  சிரித்தார். நான் பார்த்து ரசித்த ஸ்ரீரங்கம் அதன் வீதிகள்,கோவில் எல்லாமே மாறிவிட்டதே என்றார் சுஜாதா. அவர் வீட்டில் ஒரு முறை பாம்பு புகுந்துவிட்டது.அதை நான் அடித்துக் கொன்ற வீரச்செயலை சுஜாதா தன்னுடைய ஸ்ரீரங்கத்து நினைவுகளில் பதிவு செய்திருக்கிறார். ஆத்மார்த்த நண்பராக இருந்த அவர் இன்றில்லை. ' என்கிறார் மனமுருக.

No comments: