Tuesday, April 3, 2012

படுதலம் சுகுமாறன்


படுதலம் சுகுமாறன்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள படுதலம்தான் சொந்த ஊர். மொத்தமே எங்கள் ஊரில் 24 வீடுதான். பள்ளிப்பட்டு நுõலகத்தில் கடைகளில் உள்ள சின்ன சின்ன நுõல்களை எல்லாம் வாங்கி படிக்கும் ஆர்வம் உண்டு. அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன். நிறைய எழுதுவேன். நான் 8வது, 9வது படிக்கும்போதே ஒளிவிளக்கு என்ற கையெழுத்துப் பிரதி ஒன்று நடத்தினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
நான் சின்ன வயதில் நிறைய கதைகளெல்லாம் எழுதி பத்திரிகை அலுவலகத்திற்கு அனுப்புவேன். ஆனால், எதுவுமே பிரசுரமாகாமல் அப்படியே போன வேகத்தில் திரும்பி வரும். அதுவும் எனக்கு ஒரு வகையில் சந்தோஷமாக இருந்தது. நான் எழுதிய கதைகள் எல்லாம் திருப்பி வருவதை ஊரில் இருந்த அனைவருக்கும் சொல்லிவிடுவார் எங்கள் ஊர் போஸ்ட்மேன். அப்போதிருந்து ஊருக்குள் எனக்கு நல்ல மரியாதை உண்டு. இவன் பெரிய இலக்கியவாதி என்று மற்றவர்கள் என் காது பட பேசும்போது எனக்கு பெருமையாக இருக்கும்.
இருந்தாலும் என் எழுத்து மூலம் வருமானம் கிடைத்தபாடில்லை. சரி இனிமேல் கதையெழுவதை நிறுத்திவிட்டு, துணுக்குகள் எழுதலாம் என்று ஜோக்குகள் எழுத ஆரம்பித்தேன். அப்படி என்னுடைய சின்ன சின்ன துணுக்குகள், தமாசுகள் பத்திரிகைகளில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்தது. மணியார்டர் மூலம் கொஞ்சம் பணமும் கிடைக்க ஆரம்பித்தது. அப்படித்தான் ஜோக்குகள் எழுத ஆரம்பித்தேன். அப்படி எழுதிய ஒரு அரசியல் ஜோக் 1987ம் ஆண்டு, ஆனந்த விகடனில் அட்டைப்படமாக வெளிவந்து, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த சர்ச்சையால் அந்தப் பத்திரிகையின் ஆசிரியரையே சிறை வைத்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த சம்பவத்திற்கு பிறகு என்னுடைய பெயர் ரொம்ப பிரபலமானது.
என் பெயருக்கு முழு அளவிலான அங்கீகாரம் கிடைத்தது.
சரி நாம்தான் பிரபலமாகிவிட்டோமே... இனி சென்னை சென்று பத்திரிகையில் பணிபுரிந்துவிடலாம் என்று படுதளத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தேன். அதுவரை சுவற்றில் அடித்த பந்து போல திரும்பிவந்த என்னுடைய படைப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பத்திரிகைகளில் வெளிவர ஆரம்பித்தது. ஆனந்த விகடனில் சிறிது காலம் நிருபராக பணிபுரிந்தேன். ஆனால், மனம் எழுத்தை நோக்கியே சென்றதால், அந்தப் பணியை விட்டுவிட்டு என்னுடைய படைப்புகள் எல்லாவற்றிற்கும் அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது.
என்னுடைய முதல் கதை சுருக்கமாக ஒரு மர்மம் ஜுப்ளி மாத இதழில் 1988ம் ஆண்டு பிரசுரமானது. ப்ரீதா என்ற புணைப்பெயரில் இரண்டு ஆண்டு காலம் எழுதினேன். ஒரிஜினல் பெயரில் சாவியில் நான் எழுதிய கதை கடைசியாக ஒரு கேள்வி. அப்படித்தான் என்னுடைய எழுத்துப் பயணம் ஆரம்பமானது. இப்போது என்னுடைய கதைகள் கன்னடத்திலும் மொழிபெயர்ப்பாகிக் கொண்டிருக்கிறது.
இதுவரை 75 நாவல், நுõற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். எதையும் கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. க்ரைம் கதைகள் எழுதும்போது ராஜேஷ் குமாரையும், சமுதாயம் சம்பந்தப்பட்ட கதைகள் எழுதும்போது, பிரபஞ்சனையும் நினைத்து எழுதியது உண்டு.

No comments: