Friday, September 5, 2014

கம்ப்யூட்டர் முறையில் நவீனஅறுவைசிகிச்சை








டாக்டர் முத்துக்குமார் . முதன்மை எலும்பு முறிவுஅறுவை சிகிச்சை நிபுணர் பேட்டி
-------------------------------------------------------------------------------
மாறிவரும் நவீனத்திற்கேற்ப மருத்துவத்துறையிலும் பல புதுமைகள் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. முன்பெல்லாம் அறுவை சிகிச்சை என்றால் சில நாட்களுக்கு முன்பே படுக்கை வசதியில் காத்திருந்து அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டு அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்த காலமெல்லாம் இன்று மலையேறிவிட்டது. காலமாற்றத்திற்கு ஏற்ப உடலில் ஏற்படும் நோய்களை கண்டறிய பலவிதமான சோதனைகளும், சோதனை முறைகளும், சோதனைக் கருவிகளும் நடைமுறைக்கு  வந்துவிட்டன. தமிழகத்தின் தலைநகரான சென்னையைப்பொருத்தவரை தென்சென்னைப்பகுதியான தாம்பரத்திலிருந்தே தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களுக்கு பயண வசதிகள் தொடங்குகின்றன. அத்தனை பரபரப்பாக இருக்கும் நவீன சாலைவசதி கொண்ட சென்னையில்  எதிர்பாராமல்  வாகனங்களால் ஏற்படும் விபத்துகளுக்கு  அவசர சிகிச்சை அளிப்பதற்கென்றே  நவீன கருவிகள் கொண்ட  நுண்மதி அறுவை அரங்கத்தை (இண்டலிஜென்ஸ் ஆப்பரேஷன் ரூம்) உருவாக்கியிருக்கிறார்கள் பார்வதி ஆஸ்பிட்டல் நிர்வாகத்தினர்.
இத்தகைய அரங்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கருவியின் செயல்பாடு அதன் மூலம் அவசர உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கான உதவிகள் எப்படி செய்யப்படுகின்றன என்பது குறித்து விளக்கமாக அறிய டாக்டர் முத்துக்குமார் முதன்மை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணரை சந்தித்துப்பேசினோம்.

“2004 ல் ஆகஸ்டு 24ந்தேதி பார்வதி மருத்துவமனை தொடங்கப் பட்டது . நெடுஞ்சாலைகளில் ஏற்படும் எதிர்பாராத விபத்துகளுக்கும், பாதிக்கப்பட்டு விபத்துக்கு ஆளானவர்களை காப்பாற்றவும்  இந்த மருத்துவமனை மிகச்சிறந்த உதவிமையமாக செயல்பட்டு வருகிறது.விபத்து ஏற்பட்டதும் அவர்களுக்கு முதலில் தேவையானது அவசர உதவி. அதற் கு எந்த நேரத்திம் எங்கள் மருத்துவமனை தயாராகவேஇருக்கிறது. தென்சென்னையை பொருத்தவரை இத்தகைய நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனை  மிகவும் குறைவு என்பதால் எங்களது மருத்துவமனையில் நவீன வசதிகளை கொண்ட கருவிகளை இறக்குமதி செய்திருக்கிறோம்.

தற்போது மிகஅதிநவீன ஸ்கேனிங் மெஷின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முன்பெல்லாம் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்தால் அதன் ஆயுள் காலம் அதிகபட்சம் 15 ஆண்டுகள் தாங்கும். மைக்ராஸ்கோப் உதவியுடன், எக்ஸ்ரே படத்தின் துணையுடன் அறுவை சிகிச்சையை மேற்கொள்வோம். தற்போது கம்ப்யூட்டர் முறையில் முப்பரிமாணத்தில் பாதிக்கப்ப்டட பாகங்களை மிக துல்லியமாக படம் பிடித்துக் காட்டும் கணிணி ஸ்கேனிங் மெஷின் மூலம் அறுவை சிகிச்சை செய்கிற போது  சரி செய்யப்பட்ட எலும்பு மாற்று அறுவைசிகிச்சையின் பலனானதும், அதன் ஆயுளும் 20-25 ஆண்டுகள் நிலைத்திருக்கும்.  உலகஅளவில் எட்டாவதாக பார்வதி மருத்துவமனையில் நுண்மதி கொண்ட அறுவை சிகிச்சை அரங்கத்தை நிர்மாணித்திருக்கிறோம்.
சிடி ஸ்கேனிங் மூலமாக எலும்பு, மூளை பாகங்களில் ஏற்பட்டிருக்கும் நோய்களையும், பாதித்த பாகங்களையும் மட்டுமே கண்டறிய முடியும். ஒரு மருத்துவநிபுணரால் மைக்ராஸ்கோப் லென்ஸ் மூலமாகவோ, நேரிலோ மூட்டு,மற்றும் மூளையின் நோயியல் கூறுகளின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தான் பார்க்கமுடியும். அதிலிருந்து மாறுபட்டு  நுண்மதி கொண்ட அறுவை அரங்கத்தில் வைக்கப்பட்டிருக்கிற கம்ப்யூட்டர் மெஷின் மூலம் முப்பரிமாணங்களில் நோயியல் கூறுகளின் வெவ்வேறு பரிமாணப்படங்களை மிகத்துல்லிமாக பார்த்து நோய் பாதித்த பகுதிகளை  கண்டறிய முடியும். அதன் மூலம் மிகத்துல்லியமாக அறுவை சிகிச்சை செய்யவும் முடியும்.
உதாரணமாக முதுகுத்தண்டுவடத்தில் கேன்சர் கட்டி, எலும்பு மூட்டுகளில்  அடிப்பட்டிருக்கிறது.  பாதிக்கப்பட்ட இடத்தில்  ஒரு அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என்றால் இங்குள்ள ஆபரேஷன் தியேட்டரில் நோயாளியை படுக்க வைத்து விட்டு, கணிணி திரையில் நாம் அவருடைய நோய்களையும்,  காயம்பட்ட இடங்களையும் வேறொரு அரங்கில் இருந்தபடி கணிணி திரையில் கண்காணிக்க முடியும். வெவ்வேறு பரிமாணங்களில் தெரியும் துல்லியமான படத்தைக் கொண்டு முதுகுத்தண்டை ஒட்டியிருக்கும் ரத்தக்குழாய் பாதிக்காதவாறு மில்லிமீட்டர் அளவு இடைவெளியில் பிளேட்டுகள் வைத்து முதுகெலும்பு தண்டுவடத்தை சரிசெய்து ஸ்குரூ மூலம் இணைக்க முடியும். முன்பெல்லாம் வெறும் கண்ணாலு<ம், மைக்ராஸ்கோப் மூலம் பார்த்து பார்த்தே பொருத்தினார்கள். தவிர அப்படி ஸ்கேனிங் செய்யும் போது நோயாளிகள் மீது செலுத்தப்படும் எக்ஸ்ரே கதிர்கள் மருத்துவர்களையும் பாதிக்கும், தவிர சரியான மனநிலையில் மருத்துவர் இருந்து சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். கவனம் தவறும் சமயத்தில் அறுவை சிகிச்சையில் தவறுகள் நேர்ந்து விடவும்  வாய்ப்புகள் உண்டு. அப்படி மாறும் மனநிலையை சமநிலைப்படுத்த இங்கே அறுவை சிகிச்சை செய்யப்படும் அரங்கம் மெல்லிய விளக்குகளால் மனதை சமப்படுத்தும் படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே சாதனங்களையும் நவீன வசதிகளையும் கொண்ட வெவ்வேறு மருத்துவ மனைகளி லிருந்து இங்கே நடக்கிற அறுவை சிகிச்சைகளை கண்களால் பார்த்துக் கொண்டே மற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள் நமக்கு அறிவுறுத்த முடியும்.

எலும்பு மூட்டு மாற்று  அறுவை சிகிச்சையில் இனி நல்ல பயனை எதிர்ப்பாக்கமுடியும். தமிழகத்தில் பார்வதி ஆஸ்பிடலில் மட்டுமே இத்தகைய வசதிகள் இருக்கின்றன.

ஆசியாவில் மூன்றாவது இடத்தில் பார்வதி ஆஸ்பிடலில் இந்த வசதி இருக்கிறது. சாதாரண பொதுமருத்துவரால் இந்த வசதிகளை கையாளவோ, செயல்படுத்துவதென்பதோ சற்றே கடினமானது. அறுவை சிகிச்சையில் குறிப்பிட்ட துறை சார்ந்த நிபுணரால் மட்டுமே கையாள முடியக்கூடிய வசதியினைக் கொண்டது இது. இதை தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா திறந்துவைத்தார்.
இதுவரை 160 பேர் பயன் பெற்றிருக்கிறார்கள்.  முன்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு  ஏற்பட்ட செலவினை விட மிகவும் குறைவான செலவிலேயே இத்தகைய நவீன  வசதியில் அறுவை சிகிச்சையை செய்து கொண்டு நலமாக வாழ முடியும் ” என்றார்.

பாக்ஸ் மேட்டர்
---------------------
துண்டான கை நவீன சிகிச்சைமூலம் சேர்ப்பு
--------------------------------------------
வடமாநிலத்தைச்சேர்ந்தவர் ஜிதேந்தர் சவுகான் (27) சென்னைப் புறநகரில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவருடைய வலது கை துண்டானது. விபத்து நடந்த இரண்டு மணிநேரத்தில்  குரோம்பேட்டையில் உள்ள பார்வதி ஆஸ்பிடலில் ஜிதேந்தர் சவுகான் சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சைப்பிரிவில் ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் ராஜராஜன்வெங்கடேசன்  தலைமையில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்த் தொடங்கினர். வலது கால் தொடை ப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட  ரத்தக் குழாயை நவீன அறுவை சிகிச்சை மூலம்  கையில் பொருத்தி துண்டான கையை மீண்டும் இணைத்தார்கள்.

பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியிலும், சீரமைப்பு சிகிச்சைகளை அளித்தனர். நான்கு நாட்களுக்குப்பிறகு பழைய நிலையில்  ஜிதேந்தர்சவுகானுக்கு கைகளில் அசைவு ஏற்பட்டு பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார். தற்போது குணமாக இருக்கிறார். 

-செல்வகுமார்

No comments: