Thursday, September 4, 2014

சென்னைக்கு ஒரு கிராமிய ஒப்பனை

  ங்கள் ஊரில்  கரகாட்டம் ,தப்பாட்டம், ஒயிலாட்டம் , சிலம்பாட்டம் , நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்திருப்பீர்கள். அக்கலைகளையே சிலைகளாக்கி சென்னைக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது  சென்னை மாநகராட்சி.
                                  சென்னையில்  அண்ணா மேம்பாலத்தில்  களரியும், வள்ளுவர் கோட்டத்தில்  குடும்பத்தை  சித்தரிக்கும் மரப்பாச்சி பொம்மைகளையும்,  ஸ்டெர்லிங் சாலையில் சிலம்பாட்ட த்தை யும்,
பொய்க்கால் குதிரை,  கரகாட்டம் , பாம்படம் ,   ஏர்கலப்பை, சக்கரம் என்று  சிலைகளை  சென்னையின் வெவ்வேறு இடங்களில் வைத்துள்ளனர். இந்த சிலைகளை வடிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும்   சென்னை கவின் கலை கல்லுõரி முதல்வர்  ஜி.சந்திரசேகரிடம்    சிற்பங்கள் குறித்து சந்தித்து  பேசினோம்.
        ‘ களரி ன்னு பெயரைக் கேட்டதுமே இது கேரளத்து கலைன்னு நினைச்சிடறோம்.  சித்தமருத்துவம்,  வர்ணம், பாதுகாப்பு மூணும் சேர்ந்தது தான் களரி. போர்வீரர்களுக்கு   போர்க்க காலங்களில்  இந்த கலை  உபயோகமாக இருக்கும்.  . அதிலயும் சுவடு- காலால் உதைக்கிறது, அடி- கையால் தாக்குவது,  அடவு- அழகுபட செய்கிற கலையாகவே இருந்தது இது.இப்போது களரியில் வாளையும், கேடயத்தையும்  இணைந்திருக்கிறோம்.
                            சேரர், சோழ, பாண்டியர் கள் காலத்தில் இக்கலை இருந்தது. தற்போது நாடார்களும், பனையேறிகள் எனப்படுகிற இனத்தவரிடமும் . நாகர்கோவில்,  குமரி மாவட்டங்களில்  இக்கலை இருக்கிறது.

மரப்பாச்சி
                               ‘ பால் குடிக்கும் குழந்தைகள் தாயின் மார்பகத்தை  பாச்சி என்று தான் அழைக்கும் .  தாயின் மார்பகத்திலிருந்து பாலை பீய்ச்சுவதால் அதற்கு அப்படி ஒரு பெயர். குழந்தைகள் தனக்கு  விளையாடத்தருகிற
பொம்மைகளை வைத்துக்கொண்டு  தன்னை ஒரு  தாயாகவும், பொம்மைகளை குழந்தையாகவும் பாவித்து கொஞ்சிப்
பேசும்.  இப்படி  வளர்ந்து வளர் இளம் பெண்களுக்கும் இதுவே பிடித்தமான பொருளாக மாறியது. இதை எல்லாம் உருவாக்கிய நம் முன்னோர்கள் அதிகம் படிக்காதவர்களாக இருந்தாலும் பிள்ளைகளுக்காக அவர்கள்  உருவாக்கியிருக்கும் விசயங்கள் அற்புதமானவை. மர  பொம்மைகள்   குழந்தைகளுக்கு  அந்த பக்குவத்தை பாய்ச்சுவதால் மரப்பாச்சி
 என்றபெயர் வந்தது.  இந்த தத்துவத்தை உணரும் வகையில்   சிற்பமாக்கி  அப்பா, அம்மா, அக்கா,  தம்பி என குடும்பமாகவே  செதுக்கியிருக்கிறோம்.



   பாம்படம்
------------------
                           பாம்படம் ‘ கிராமத்துப்பாட்டிகள் காதில்  அணியக்கூடியது  பாரதிராஜாவின்படங்களில்  பார்த்திருக்கலாம். அதன் வடிவத்தை சதுரம் , அறுங்கோணம், முக்கோணம், வடிவங்களிலேயே இருக்கும். அதன்  காரணம் குழந்தைகள் வரைவதாகட்டும் , செய்யும் பொருள்களாகட்டும்  இந்த வகை வடிவங்களிலேயே இருக்கும் அதிலிருந்து உண்டான வடிவம் தான்  இந்த  பாம்படம்  என்றார்.

 பொய்க்கால் குதிரை 
--------------------------  
                                    இதில்  குதிரைக்கூட்டை அணிந்து கொண்டு சவாரி செய்து ராஜாவும், ராணியும் நகர்உலா வருவது
 போன்று அமைத்து கதை சொல்லும் முறையான கலையாகும்.  இந்த கலை தஞ்சாவூரில் தோன்றியது.

   கரகாட்டம்
-------------------
                          கரகாட்டம் தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று. தலையில் கரகம் வைத்து ஆடுவது. கரகம் என்பது பானை வடிவ கமண்டலத்தை குறிக்கும்.  சங்க இலக்கியத்தில் குடக்கூத்து என்றுகரகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலம்பாட்டம்
-------------------
                         இதில் சிலம்பாட்டம் வீரர்களுக்குரியபோர்த்திறனுக்கு பயிற்சிஅளிக்கும் விதமாக கற்றுத்தரப்பட்டிருக்கிறது.
மூங்கில் கழியைக்கொண்டு எதிராளியுடன் மோதி தோற்றவர் முகத்தில் கழியின் முனையில் அப்பிய சுண்ணாம்பால் 
பொட்டு வைத்து வெற்றி பெற்றதைக்  குறிப்பார்கள்’ என்றார்.
                                                    இப்படி  ஒவ்வொரு சிலையின் கீழும் சிலையைப் பற்றிய விவரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும் என்றார். அவர் மட்டுமின்றி அவரிடம் பயின்ற இருபது கலைஞர்களின்  உதவியுடன் வடித்து வரும் முதல்வர் . சந்திர
 சேகரனை மக்கள் தொலைக்காட்சி, விருது கொடுத்து கவுரவித்திருக்கிறது.
       ஓவியரும் சிற்பியுமான சந்ரு என்கிற சந்திரசேகர் 1997ம்ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற பனிச்சிற்பக்   கண்காட்சி யில்‘  சரஸ்வதி’யின் சிலையை செதுக்கி உலகில் இரண்டாவது பனிச் சிற்பக் கலைஞ ராகவும், 1998ம்ஆண்டு இலங்கையில் நடைபெற் ற கண்காட்சிஅரங்கிற்கான  தெற்காசிய நாடுகளுக்கான போட்டியில் இரண்டாம் பரிசையும் பெற்றார். மதுரை உயர்நீதிமன்றத்தில் காந்தி சிலையும்,  தாம்பரம்  சித்தமருத்துவ கல்லுõரியில்  அயோத்திதாச பண்டிதரின் சிலையும்  இவரது கைவண்ணமே! என்பது குறிப்பிடத்தக்கது.
                   இனி,   முப்பது  ரூபாய் சலுகைப் பயணச் சீட்டில் நாள் முழுவதும் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க 
சென்னையை வலம்வருவதுடன் கிராமிய கலைகளின் சிற்பக்  கதைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
            
பேட்டி மற்றும்  படங்கள்  -விஜிசெல்வகுமார்    

No comments: