Friday, September 5, 2014

பெருகும் மனமுறிவுகள்! தொடரும் விவாகரத்துகள்!




            ஆண்,பெண்  இருவரையும் இணைக்கும்  திருமணங்கள்  சொர்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பார்கள் , ஆனால் குறைந்த பட்சம் ஏழு பொருத்தங்களாவது பார்த்து செய்து வைக்கப்படும் திருமணங்கள் முதலிரவிலேயே  இனிய இல்லறமாக மாறும் சூழலில், பலருக்கும் விடியும் பொழுது கோர்ட் படிகளை மிதிப்பதாகவே இருக்கிறது. பலவருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஏழு, எட்டு வருடங்கள் வாழ்ந்து பிடிக்காமல் இருவரும் சேர்ந்து  முடிவெடுத்து  பிரிந்த தம்பதிகளை சமுதாயம் தனக்கு ஒவ்வாத மனிதர்களாகவே பாவித்தது. ஆனால் , அதுவே இன்று ஒரு பேஷனாகி விட்டதாக தோற்றம் தருகிறது  என்றால் அதனுள் இருக்கிற சிக்கல்கள் தான் என்ன?
                                கடந்த ஆண்டு களில் 2005முதல்  2007 வரை வருடத்திற்கு  2650, 3000, 3250  வழக்குகள் முறையே  2008ல் அது இன்னும் அதிகமாகவே பதிவுசெய்யப் பட்டது என்கிற து சென்னை குடும்ப நல நீதிமன்றம்.அது இன்றைக்கு 3500 -த்தாண்டியிருக்கும்.  குழந்தைகள் விளையாட்டைப்போல சின்னச்சின்ன காரணங்களை சொல்லி விவாகரத்திற்கு நிற்கிறார்கள் இளம் வயது தம்பதிகள், தங்கள் குழந்தைகளோடு,டைவர்ஸ்க்கு காரணமாக சொல்லப்படுபவை அவளுக்கு சமைக்கத் தெரியவில்லை, அவள் கண்ணாடி போடுவது திருமணத்திற்கு பிறகே தெரிந்தது.முத்துப்போல்  பல்வரிசை  இல்லை. கை,கால்களில் முடி இருக்கிறது. வீட்டில் வற்புறுத்தியதால்  ஒப்புக் கொண்டேன், அவனுடைய பழக்க வழக்கங்கள் சரியில்லை, என்பெயர் சொல்லி கூப்பிடுகிறாள், பலர் முன் ‘டி’ போட்டுக் கூப்பிடுகிறான்.திருமணமாகி மூன்று மாதங்கள் கூட சேர்ந்து வாழமுடியவில்லை. மாமியார், நாத்தனார் தொல்லை என்று   நீளும்  பட்டியலே இருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் இவை வெறும் அற்பகாரணங்கள். ஆனால் , ஆழ் மனதில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதையே சுட்டிக் காட்டுகின்றன.இதனால் ,குழந்தைகள் தான் மனரீதியாக அதிகம் பாதிக்கப் படுகின்றனர் என்பதை பெற்றோர் உணரவேண்டும். 
                                   பெருகிவரும் விவாகரத்துகள்,மறுதிருமணங்கள்  குறித்து செகண்ட்ஷாதி டாட் காம். இணையதளம் மூலம்  ஒரு சர்வே நடத்தியது.  அதில்  
 எங்களுக்குள் பொருத்தமில்லை-4%, கணவனோ , மனைவியோ திடீரென இறப்பது -21%, பொறுமை இன்மை-36%, திருமணத்திற்கு முன் தவறான நடவடிக்கையும் , வெளித் தொடர்பும் -28%, குடும்ப கட்டுப்பாடு, நெறிமுறைக்கு ஒத்துப்போவதில்லை-4%,  வேலைமாற்றம்- 4%              
 இதில் இன்றைய இளசுகளின்  திருமண விருப்பங்களாக ..
  59% ஆண்களுக்கு சிகப்பு நிற பெண் அழகாகவும் , புத்திசாலியாகவும் இருக்கவேண்டும் என்றும் , 33% பெண்களுக்கு முக லட்சணமும், அதிகப்படியான  வசதிகளும் உள்ள ஆண்களையும்  பிடித்திருக்கிறது .88% ஆண்களுக்கு டிகிரி படித்தபெண்களாக இருப்பது நல்லது, ஆனால் தன்னை விட அதிகம் படித்திருக் கக்கூடாது , பி.எச்.டிபெண்களா ? வேண்டாம் என்கிறார்கள்.
விவாகரத்திற்கான காரணங்களுக்கும்,இளைஞர்களின் திருமண எதிர்பார்ப்புக்குமான முரண்பாடுகளுக்காகவே இந்த புள்ளிவிவர சதவிகிதங்கள்.
நாம் குடும்பநல நீதிமன்றங்களுக்குள் சுற்றி வந்தபோது பெற்றோர்களுடன்  பல இளம் பெண்கள் குடும்பநல ஆலோசணை மையத்தில் நின்றுகொண்டுஇருந்தார்கள்.அவர்களது குழந்தைகள் மிரட்சியான பார்வைகளோடு நின்றிருக்கிறார்கள்.அந்தமையத்தின் எதிரிலேயே இருக்கிறது குடும்பநல நீதிமன்றங்களின் குழந்தைகள் காப்பகம்.அங்கே குழந்தைகள் விளையாட பொருட்கள் நிறைந்து கிடக்கின்றன.
 வரிசையாக ஒவ்வொரு இளம் பெற்றோர்களும்  ஆலோனைக்கு ச் அழைக்கப்படுகிறார்கள்.குழந்தையை தன் அம்மாவிடம் விட்டுவிட்டு அவள் உள்ளே செல்ல ,உடன் சமரசம் செய்து வைக்க கணவனும் அழைக்கப்பட   அப்பாவை பார்த்த ஆவலில்  குழந்தை ஓட கண்டுகொள்ளாலேயே தட்டிவிட்டு கடந்து போகிறார் தந்தை.  ‘போய் அங்கே விளையாடு வர்றேன் ’என்று குழந்தையை துரத்திவிட அழுகிற குழந்தையை இழுத்துச்செல்கிறாள் பாட்டி.
அம்மாவுக்கும் , அப்பாவுக்கும் என்ன சண்டை ,என்ன பிரச்சினை என்று புரியாமலேயே  பார்க்கும்  குழந்தைகளுக்கு சிலசமயங்களில் ஏனோ அவர்கள் மீது விழுகிறது  அடிகள் கோபமாக. தான் பிறந்ததற்கான தண்டணையா? என்றுகூட புரிந்து கொள்ள முடியவில்லை குழந்தையால்.
நாம் சமரச மையத்திற்கு வந்திருந்த அம்முவிடம் பேசினோம்.திருமணமாகி மூன்று ஆண்டுகளில் இரண்டு குழந்தைகள். கணவனுடன் பிரச்சினை. எங்களுக்கு வீட்ல பொருத்தம் பார்த்து தான் கல்யாணம் பண்ணிவெச்சாங்க.அப்பறம் தான் பொய் சொல்லி ஏமாத்தினதே எங்களுக்கு தெரிஞ்சது. அவர் மனநிலை பாதிப்புள்ளவர்.சரி அமைஞ்சது வாழ்க்கை சரி பண்ணிக்கிடலாம் னு நானும் பொறுத்துப்பொறுத்துப்பார்த்தேன். முடியலை. நான் இப்போ  ஒரு வக்கீல் ஆபீஸ்ல அக்கவுண்டண்டா வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். ஒரு முறை 3500ரூபாய்கட்டுங்க  டைவர்ஸ் வாங்கிடலாம்னு சொல்றாங்க.ஆனா வாய்தா மேல வாய்தா வாங்கி இதுவரை பதினைஞ்சு ஆயிரம் செலவுபண்ணியிருக்கேன்.அந்த பணத்தை வெச்சு ஏதாவது தொழில் செய்ஞ்சிருந்தாலும் பிழைக்க உதவும்.(கண்ணீர் வடிகிறது). சரி இத்தனை நாள் வாழ்ந்தாச்சு அப்பிடியே வாழமுடியாததுக்கு என்ன காரணம்‘ அவரோட நெருக்கமான நண்பர் கூடச்சேர்த்து  என்னை சந்தேகப்பட்டு அவரும்,அவங்க குடும்பமும் பேசுது. ஆனா,பக்கவாதம் வந்து கிடந்தப்பவும்,மனநிலை பாதிக்கப்பட்ட சமயமும்
 நான் தான் கஷ்டப்பட்டு காப்பாத்தினேன்ங்கறதெல்லாம் அவர் மறந்திட்டாரு. ஒரு மனநிலை மருத்துவர்கிட்ட அவரை காட்டினப்ப தான் எனக்கு அவரை பத்தின எல்லா உண்மைகளும் தெரியவந்துச்சு. அவருடைய நெருங்கின நண்பர்கிட்ட கேட்டா  தெரியும்,யாரும் நல்ல காரியத்தை கெடுத்திடாதே , கல்யாணம் ஆனா சரியாகிடும்னு சொன்னாங்கன்னு சொன்னவர் மேல என்னை சேர்த்து  சந்தேகப்பட்டு பழிபோட்டு நண்பர்மேல கேஸ்போடவும் பெரிய பிரச்சினை ஆனது. ’ என்றார்.

அதேபோல இன்னொரு பெண்ணும் தனக்கு மாமியாருடன் ஒத்துப்போகவில்லை.எந்தநேரமும் படுக்கையறையில் இருக்கும் போது ஜன்னல் வழியாக ஒட்டுக் கேட்கிறார்.அதைவைத்து எனக்கும் என்கணவருக்கும் பிரச்சினை செய்து இன்று கோர்ட் படிகளை மிதிக்கும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டார்.அந்தளவுக்கு என்கணவர் சரியான அம்மாப்பிள்ளை என்கிறார்.கண்ணீர் மல்க.  தொடர்ந்தவர் ‘இங்கே விவாகரத்து வாங்கிட்டு பிரிஞ்சதும்  அடுத்த ஒரு வருஷத்தில  ஆம்பளைங்க  வேற பொண்ணுபார்த்து ,வரதட்சனை சீரோட கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கையை சந்தோஷமாக ஆரம்பிப்பாங்க,பெண்களுக்கு இன்னொரு கல்யாணம் ங்கறது இன்னைக்கு மாறிக்கிட்டு வர்ற காலகட்டத்தில சரியா ? ஆரோக்கியமா அமையுமா?மன ரீதியா எத்தனை பிரச்சினைகளை நாங்க சந்திக்கவேண்டியிருக்கும்’ என்கிறார்.

அவர்களது பெற்றோர்களிடம் ‘ அடுத்த தலைமுறை சந்திக்கிறீர்கள். நீங்கள் வாழ்ந்த காலத்து வாழ்க்கைக்கும் இன்று உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பிரச்சினைக்கும் என்ன காரணம் என்று உணர்ந்திருக்கிறீர்களா?என்றோம்  ’ அன்னைக்கு எங்களுக்கு என்னவானாலும் புருஷன் அவரை நம்பிவந்தாச்சு , கஷ்டமோ,நஷ்டமோ தலையெழுத்துன்னு சகிச்சுக்கிட்டு பிள்ளைங்களை வளர்க்கணும்னு  இருந்திட்டோம் .எவ்வளவோ நாத்தனார்,மாமியார் கொடுமை களை பாத்துட்டோம்.அப்போ என் புருஷன் அடிச்சாக்கூட ஏன்னு திருப்பி கேட்க மாட்டோம் .இன்னைக்கு உள்ள பிள்ளைங்க புருஷன் அடிச்சாக்க எப்பிடி அடிக்கலாம் னு எதிர்த்து பேசுதுங்க.சம்பாதிச்சு நாலு காசு பார்த்ததும் , புருஷன்கிறவன் சம்பாதிக்கறது  மட்டும் தானே.இவன் எப்பிடி நம்மளை அடிக்கலாம்ங்கற ,ஆத்திரம் ,கோபம் முன்னே வந்திருது.பொறுமையா போனா பிரச்சினை  இல்லை.அது  இங்கே யாருகிட்டயும் இல்லை ’. 

சரி, ஆண்கள் என்ன சொல்கிறார்கள் ராம்குமாரிடம் பேசினோம்‘ கல்யாணம் பண்ணி கொஞ்சநாள் கூட ஒத்துமையா வாழலைங்க. எப்பப்பாத்தாலும் போன்ல பேசிக்கிட்டே இருப்பா ,யாருகூடபேசறான்னு பார்த்தா , முன்னாள் காதலன்கூட. அதுவே பிரச்சினையாகி இப்போ இங்கே வர வேண்டியதாச்சு ,இப்போ , அவனோட தான் வாழ்வேங்கறா. எவ்வளவு செலவு பண்ணி கல்யாணம் பண்ணி என்ன சார்?’ என்கிறார் வேதனையாக.
காதலிலாவது பேசிப்புரிந்தகொள்ள வாய்ப்புகள் இருக்கும் . பெற்றோர் பார்த்து வைக்கிற திருமணங்களில் அதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.தவிர ,பெற்றோர் பார்க்கிற திருமணங்களில் குடும்ப நிர்பந்தங்களும், மிரட்டல்களும் அதிகம்.பாசத்திற்கு கட்டுப்பட்டு மனம் ஒப்பாமல் திருமணத்திற்கு தயாராகும் பலர் அதிலிருந்து மீள வழிதெரியாமல் சூழ்நிலைக் கைதிகளாய்  சிக்கிக் கொள்கிறார்கள்.
சமீபத்தில் காதலித்து  ஊர் சுற்றிய இளைஞன் பிறகு,அவள் வாயாடியாக  இருக்கிறாள் என்று  திருமணத்திற்கு மறுத்ததும் நடந்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் மற்றும் சம்பவங்கள்  மூலம்  பொறுமை இன்மையும் சத வீத அடிப்டையில் பாஸாகிவிட,
திருமணத்திற்கு முன்பான நடவடிக்கைகள் ரகசியமாக இருக்கவேண்டிய பட்சத்தில் (அ) நடந்த நிகழ்வுகளின் முடிந்து விட்ட பட்சத்தில்  திருமண இரவில் சத்திய பிரமாணமாக நிஜத்தை முழுமையாக சொல்லாதபட்சத்தில் அவசரத்தில்  பலர் மறுநாள் கோர்ட்வாசலை மிதிக்கின்றனர். இவர்களில் காதலர்கள் எண்ணிக் கை அதிகம் . அதற்கும் காரணம்  திருமணத்திற்கு முன்பாக புரிந்து கொள்ளும் வாழ்க்கைவேறு , அதற்கு பிறகான வாழ்க்கை வேறு என்பதாக இருக்கிறது.
  
இது குறித்து பிரபல குடும்பநல வழக்கறிஞர் கே.சுமதியை சந்தித்து பேசினோம்....
*ஒவ்வொரு ஆண்டும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கைஅதிகமாகி கொண்டிருக்கிறதே?
முதலில் ஒரு கணவன் அல்லது  மனைவி வழக்கைத் தாக்கல் செய்கிறபோது, ஒரு பதிவெண் கொடுக்கப் படுகிறது. அதுவே அவர்கள் மன ஒப்பந்தப்படி(மியூச்சுவல் டைவர்ஸ்க்கு) விண்ணப்பிக்கும் போது, மீண்டும் ஒரே வழக்கிற்கு வேறு எண் தரப்படுகிறது. அதனாலேயே இந்த  எண்ணிக்கை உயர்வு. 3500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்க அதில் 800 வழக்குகள் மறு பதிவெண் கொண்டதாக இருக்கும்.
*திருமணமாகி 60 ஆண்டுகளுக்குப்பின் பிள்ளைகளை செட்டில் செய்துவிட்டு ஒரு தாய் டைவர்ஸ்க்கு விண்ணப்பிக்கிறாள்?
பாட்டுக்கச்சேரி,டிவி, சமையல், சம்பாதித்தல் இவைகளில் உழைக்கும் விருப்பமும்,  தனக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்று தோன்றுகிறது. தான் ஏற்படுத்திக் கொண்ட குடும்ப கடமைகள் , குழந்தைகள் எதிர்காலத்திற்காக  சகித்துக் கொண்டு பிரியாத வர்கள். காலப்போக்கில் ஏற்படும்  மன அழுத்தத்தில் இருந்து மீளுவதற்காக,  முதிர்ந்த வயதில் டைவர்ஸ் கேட்கிறார்கள்.   இதை திமிர் , அறிவற்ற தன்மை என்று பேசுவதை விட்டு , பொறுமையோடு அணுக வேண்டும்.  இளம் வயது மனநிலை, கருத்துச் சுதந்திரம், தன் திருமணத்திற்கு முன்பான  தனது குடும்ப உறவு முறைகள், தொடர்ச்சி மாறி வரக்கூடிய குடும்ப  சூழலுக்கு ஏற்ப, நம் எண்ணங்கள்,கருத்துக்கள்  மாறி வருவது  தவிர்க்க முடியாத ஒன்று. அவர்களது  இடைவெளியை பேசி  சரி செய்யமுடியும்.

*ஆண்,பெண்ணிடையே சகிப்புத்தன்மை குறைவதை வழக்குகள் எண்ணிக்கை  காட்டுகின்றன இல்லையா?
ஒரு பெண் இன்றளவும் சமைக்கவேண்டும் , சாப்பாடு போட வேண்டும் , அவள் வேலை பார்ப்பவளாக இருந்தாலும்  கடமைகளில்  தவறக் கூடாது.இந்த எதிர்பார்ப்பு நடைமுறையில் பலசமயம் ஒத்துவருவதில்லை. இன்று சமையல் கற்கும் கால அவகாசம்  இளம் பெண்ணுக்கு  இல்லை. அவளும் படிக்கிறாள். அதே படிக்கிற ஆணுக்கு சமைப்பது, வீட்டு வேலைகள் பார்ப்பதும் அவசியமில்லை என்கிறோம். இன்றைக்கு  போட்டிகள் நிறைந்த வேகமான  வாழ்க் கை முறையை சந்திக்கிறாள் .  இதை அவளது  பிரச்சினைகளோடு பயணம் செய்யும் சம வயதினரால் மட்டுமே  புரிந்து கொள்ள முடியும்.
*இளம் வயதினர் டைவர்ஸ்க்கு நண்பர்களுடன் விவாதிப்பது ஆரோக்கியமானதா?
தலைமுறை இடைவெளி இல்லாமல் பேசக்கூடிய பெரியோர்களை  சந்திக்கும் போது,  தங்கள் பிரச்சினைகளை பேசி,விவாதிப்பார்கள். ஆனால், தான் சந்திக்காத போராட்ட சூழ்நிலையில் வாழநேரும்  இந்த  தலைமுறை தன்னுடைய பார்வையில் பார்க்க விரும்புமே தவிர,பெரியவர்கள்  பார்வை யில் பிரச்சினையை அணுக விரும்புவதில்லை.வற்புறுத்துவதால் விலகல்  ஏற்படுகிறது. மேலும் , விட்டுக் கொடு, பொறுமையாக இரு, என்று பெண் ணின் பெற்றோர் (ஆணின் பெற்றோரும்) அவளுக்கு அறிவுறுத்து போது,அவர்களுடன்   தன் பேச்சை நிறுத்திக் கொள்கிறாள். இதனால் நியாயமான அறிவுரை  கூட  அவளுக்கு 
கிடைப்பதில்லை.வேலை பார்க்கிற  ஆணுக்கு ஏற்படும் மன நெருக்கடி, பெண்ணுக்கு இருக்கக் கூடாதா?  அனுபவமற்ற சக நண்பர்களிடம்  பிரச்சினைகளை விவாதிக்கும் போது உணர்ச்சி  வசப்பட்டு மேலும் பிரச்சினைகள் வளரவே செய்யும்.  
*காதலர்கள்  அவசர திருமணம்செய்து , அவசர பிரிவுக்கும் முன் வருகிறார்கள் இல்லையா?
மீடியாக்கள் காதலைப்பற்றி  தவறான அர்த்தங்களை  விதைக்கிறது. பால் போன்ற இளைஞரின்  மனதை  திரியச் செய்கிறது.  காதல்ங்கறது வீட்டு வாடகை, அரிசி, பருப்பு,துணிமணிகள் , இன்றைய வாழ்க்கைக்கு வசதிகளை தேடும் முயற்சி, குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு பற்றி சொல்லித் தருவதில்லை. அகாலமாக  தம்பதியரில்  ஒருவர் இறந்தாலும், அந்த சூழலை சந்திப்பது  தவிர்க்க முடியாத ஒன்று , பிரச்சினை, இழப்பு, பொருளாதாரச் சிக்கல் என்று வரும்போது மன தைரியத்தோடு சந்திப்பது,   ஒருவரை ஒருவர் ரசித்து அவரவர்  நிறை, குறைகளை  ஏற்றுக்கொண்டு பழகும்போது  தான் காதல் வெற்றி பெறும் .
  *விவாகரத்துகள் மறுதிருமணங்களில் இப்போது எதிரொலிப்பதை பார்க்க முடிகிறதே? 
அவசரத் திருமணங்கள், அவசர பிரிவுகளின்  பக்குவமற்ற தன்மை,   இப்படி ஒரு ஆரோக்கியமற்ற வாழ்க்கை அதிக அனுபவங்களை கற்று தரும். வாழ்க்கையில் பொறுமை அவசியம் என்பதை காலம் உணர்த்தும்.  இக்கரைக்கு அக்கறை பச்சை இல்லை, என்பது போகபோகத்தான் புரியும்.அவரவரின் அந்தரங்க மனவலி அவரவரை சார்ந்தது. இதற்கு மிகுந்த மனோபலம் வேண்டும்.  குழந்தைகள் இருப்பின்  மனபாதிப்பு ஏற் படாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.  என்றார்.  
                 
திருமணங்கள் தம்பதிக்குள்  முதலில் உடல் நெருக்கம் காட்டி, பின்பே மனநெருக்கத்தை ஏற்படுத்துகிறது.ஆனால், காதலிப்பவர்களுக்கும் இப்படியான சூழலில் அதிக நெருக்கம் உண்மையான,ஆழமான  புரிதலை உண்டாக்குவதில்லை என்கிற  நிலையில், காதலர்கள் பிரியலாம். அப்பாவும், அம்மாவும் பிரியலாமா?அப்படி பிரிந்து  வேறொரு அப்பா,அம்மாவை இவர்கள் காட்டும் போது  அது என்னமாதிரியான விளைவுகளை குழந்தைகளின்  எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பதற்கு   காலம் தான் பதில்  சொல்ல முடியும் .
           ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ  விவாகரத்துக்குப்பிறகு  மறுதிருமணங்கள் செய்வதற்கு எங்கிருந்து துணிச்சல் இவர்களுக்கு வருகிறது என்று பார்க்கிற பொழுது, முதலில் தேவைக்கு அதிகமான பணம் தனக்கு கிடைப்பது. ஒரு ஆணை சார்ந்து வாழ்வது தேவையற்றது என்று நினைப்பது. அவனுக்கு வரதட்சனைதந்தும், சம்பாதிப்பதையும் கொடுத்தும், அம்மாவைப்போல நான் ஏன்அடிமையாக  இருக்கவேண்டும் என்று எண்ணுவதும். தனக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணமே . அதே நிலை ஆண்களிடமும் ஆணாதிக்க நிலையாக தொடர்கிறது. அப்பாவை மதிக்கும் அவளுக்கு அதே ஸ்தானத்தில் கணவணை வைக்க தோன்ற வில்லை.அம்மாவை மதிக்கும் ஆணுக்கு சக மனுஷியாக தாய்க்குப்பின் தாரம் தான் ,ஆதார ஸ்ருதி என்று தோன்றவில்லை. பெண்ணுக்கு பணம் தன்னிச்சையான தைரியத்தை  தந்து
விடுகிறது. மேலும் தன் கணவனுக்கு நிகரான சக நெருங்கிய ஆண் நண்பர்களும் இருக்கிறார்கள் என்கிற  துணிச்சல். தன் வீட்டில் அப்பா அம்மா  தருகிற அளவுக்கு அதிகமான சுதந்திரம் . 
                            

-விஜிசெல்வகுமார்    

No comments: