Sunday, March 14, 2010
ஒரு லட்சம் ரூபாய்
சேமிப்பைபற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பொன்னய்யாவிடம் தான் கேட்க வேண்டும். பொன்னய்யாவை பெயர் சொல்லி அழைப்பவர்களை விட, "ஒரு லட்சம்' என்று அழைப்பவர்களே காந்தி மார்க்கெட்டில் அதிகம். வியாபாரிகள், முதலாளிகள், வண்டிக்காரர்கள், ஆட்டோக்காரர்கள் இப்படி அனைவரும் பொன்னயாவை ஒருலட்சம் என்று தான் அழைப்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அந்தக் காரணத்தைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு அவரைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையா?
திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி மூட்டைகளைச் சுமக்கும் மீன்பாடி வண்டி ஓட்டிக் கொண்டி ருக்கிறார் பொன்னைய்யா. உச்சிப் பிள்ளையார், தாயுமானவர் சுவாமி அருளால் மோட்டார் வைத்த வண்டிகள் அதிகமாகி விட்ட காலத்திலும், அவர் காலாலேயே மிதித்து ஓட்டிக்கொண்டிருக்கிறார். அதற்காக அவருக்கு பிழைப்புக்கான வாய்ப்புகள் குறைந்துவிட வில்லை. அவருக்கான தொடர் வாடிக்கையாளர்களும் இருக்கவே செய்தார்கள். அதற்காக அவர் யாரிடமும் பேரத்திற்கு சண்டை போட்டதில்லை. வாடிக்கையாளரிடமும் பணத்திற்காக பேரம் படிய மல்லுக்கு நின்றதில்லை. நியாயமான கூலியை சொல்லி விடுவார். வண்டியை எடுத்துக் கொண்டு வந்து பொருட்களை தானே ஏற்றி இறக்கி கொண்டு சேர்க்கும் அழகையும், அதற்காக அவர் சுமக்கும் பாரத்தையும் உழைப்பையும் பார்த்து அவர்களாகவே பேசிய தொகையை விட சற்று அதிகமாக கொடுத்து விடுவதோடு வாடிக்கையாளராகவே ஆகிவிடுவார்கள்.
பொன்னைய்யாவைப் பொருத்தவரை காலை நான்கு மணிக்கெல்லாம் காந்தி மார்க்கெட்டுக்கு வந் து விடுவார். மார்க்கெட்டில் நள்ளிரவில் வந்து குவியும் காய்கறிகளை வாங்க வரும் வியாபாரிகளால் வியாபாரம் சூடுபிடிக்கும் நேரம் அது. அவர்கள் விலைபேசி , வேண்டிய காய்கறிகளை வாங்கி அவைகளை மூட்டையாக கட்டிப்போட்டு விடுவார்கள். காலைநான்கு மணியிலிருந்து பத்துமணி வரை தான் பரபரப்பாக இருக்கும். அதிலும் துõர சவாரிகளான நான்கு இடங்களுக்கு போய் வந்தாலே நேரமாகிவிடும். முகூர்த்த நாட்கள் என்றால் அன்றைக்கு முதல் நாள் முழுக்க சவாரி வந்து கொண்டேயிருக்கும். அதிலும் பலத்த போட்டியிருக்கும். இப்படி பல விசயங்களை எண்ணிக்கொண்டே..
வாடிக்கையாளரோடு சேர்ந்து மூட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு டீக்கடை பக்கமாக நிறுத்தி ஒரு டீயும், பன்னும் சாப்பிட்டு ஏறி மிதிக்கத் தொடங்கினால் தில்லைநகரில் கொண்டு வந்து இறக்கிவிட்டு, அடுத்த சவாரியாக அரிய மங்கலம் செல்ல வேண்டும். அங்கு முத்து ஓட்டலுக்கு காய்கறிகளை இறக்கவேண்டும். அதை முடித்து செந்தண்ணீர்புரம் சாயபு கடைக்கு மூட்டைகளை இறக்கி விட்டால் அங்கேயே காலை டிபனை முடித்துக் கொள்ளலாம்.பொன்னைய்யாவிற்கு சிறுவயது முதலே டீயும் பன்னுமே அதிகாலை டிபன். பிறகு நான்கு இட்லிகள். மற்றபடி டீத்தவிர வேனறெந்த பழக்கங்களும் அவருக்கு இல்லை. அப்படியும் உடல் வலி அதிகமாக தெரிந்தால் சுடுதண்ணீர் காய்ச்சி குளித்து விட்டு சதகொப்பை என்று நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் குழந்தை பெற்ற பெண்களுக்கு மருந்தாக பயன்படும் பொருளை வாங்கி அதோடு பூண்டு சேர்த்து அரைத்து காரக்குழம்பு வைத்து சாப்பிட்டால் உடல்வலி எல்லாம் பறந்து போகும் என்பது அவருக்கு அம்மா சொல்லிக்கொடுத்த வைத்தியம். இப்போது தில்லைநகரில் மூட்டைகளை இறக்கி அடுத்த ஒரு மணி நேரத்தில் தயாராக வேண்டும். என்று எண்ணிக்கொண்டே வண்டியை மிதிக்கத் தொடங்கினார்.
பொன்னைய்யாவிற்கு நான்கு பிள்ளைகள் அதில் ஒரு ஆண் , மற்ற மூவரும் பெண் குழுந்தைகள் அனைவரும் இப்போது படித்துக் கொண்டிருக்கிறார்கள். வீடு புறம்போக்கு இடம் என்றாலும் கவர்மெண்டில் பட்டா வாங்கிக் கொடுப்பதாக கடந்த தேர்தலில் வார்டு மெம்பர் வாக்கு கொடுத்திருக்கிறார். பெண் குழந்தைகள் அவர் மீது அதிகபாசமாக இருப்பார்கள். மனைவியை பொருத்தவரை மூன்று பெண்குழந்தைகள் என்பதால் பணம் சேர்க்க வேண்டும். படிக்க வைக்கவேண்டும் என்று, மனைவி கற்பகமும் பூக்கட்டி கொடுத்து, வீட்டில் மாவரைத்து விற்று கிடைத்த சிறு சிறு வேலைகளை அவளும் செய்து கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் ஆதரவாகவே இருந்து வருகிறாள். இந்நிலையில், தான் சம்பாதிக்கும் பணமெல்லாம் வாய்க்கும், வயிற்றுக்கும் சரியாகவே இருக்கிறதே! என்று பொன்னையாவிற்கு வருத்தமாக இருந்தது. மனைவி அவளின் பங்குக்கு சேர்த்து வைக்கிறாள். தன் பங்குக்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறோம். இன்றிலிருந்து சேர்க்கத் தொடங்கினால் தான் பிள்ளைகள் படித்து முடிக்கும் போதாவது கையில் நாலு காசு மிச்சம் இருக்கும். அவள் சம்பாதிப்பதில் பாதியை சேமித்து வைக்கிறாள். பொன்னைய்யா சம்பாதிப்பதில் முழுக்க குடும்ப செலவுக்கு போய் விடுகிறது.மனைவி பிடுங்கிவிடுகிறாள்.
"வரும் வருமானத்தில் கொஞ்சம் பணத்தை மிச்சம் பிடித்து சேமிக்க வேண்டுமே!' என்ன செய்யலாம். என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது பார்த்து நண்பன் கந்தசாமி வந்திருந்தான்.
"" என்ன சவாரி போயிக்கினு வந்திட்டியா? எனக்கு ஒருத்தன் வாச்சானே பணத்தை வாங்கறக்குள்ள தாவு தீந்துப்போச்சு. சரி, வா பொண்ணு டீ குடிச்சுட்டு வருவோம். '' என்றழைத்து.
பணத்தை சேமிக்கும் யோசனையில் ஆழ்ந்திருந்த பொன்னைய்யாவை உசுப்பினார்.
"" என்ன பொண்ணு இன்னைக்கு ரொம்ப யோசனையா இருக்கே? '' என்றார்.
""ஒண்ணும் இல்லை. தினம் தினம் தான் சம்பாதிக்கிறோம். கையில நாமக்குன்னு நாலு காசு சேர்க்க வேணாமா ''
""வாஸ்தவம் தான். ஆமா, உனக்கு தான் எந்த பழக்கமும் இல்லையே .அப்படி என்ன செலவு பண்றே? . சரி அத்தைவுடு ஆயிரம் இருக்கும் செலவு. இப்ப என்ன காசு சேர்க்கணுமா . பேசாம நம்ம பாண்டிக்கிட்ட சீட்டு போட வேண்டியது தானே. ''
""அது சிரமம். தினம் ஐம்பது ரூபாய் கேட்பான் கஷ்டம்''.
""ஒரு தபா ஆரம்பிச்சிட்டேன்னு வையேன். அப்பால அது பாட்டுக்கு போயிக்கிட்டே இருக்கும். ''
""அப்படியும் பலமுறை பண்ணி பார்த்து அப்படி வாங்கின காசு எல்லாம் ஏதாவது ஒரு செலவுன்னு போயிடுது. யோசிச்சு பார்த்தா நல்ல செலவு தான் செய்திருக்கேன்.''
"" அப்ப இப்படி செய். உண்டியல் போடு. ரொம்பினதும் அதை மொத்தமாக எடுத்து பேங்க்ல போடு. வட்டியெல்லாம் கிடைக்கும்பா''
""காசில்லாத நேரத்தில அதையும்தான் உடைச்சிடறாங்க. ஒரு லட்சம் ரூபாய் சேர்த்து பார்க்கணும்ப்பா''
""அப்ப அதுக்கு நீதான் புதுசா ஏதாவது யோசனை கண்டுபிடிக்கணும்'' என்றார் கந்தசாமி.
யோசித்துக் கொண்டே இருந்தவருக்கு. ஒரு யோசனை தோன்றியது. அது கையை கடிக்காத விதத்திலும் இருந்தது.
அது தினசரி பத்துபத்து ரூபாயாக சேமிப்பது. அதை தினசரி வங்கியில் போட்டுவிடுவது என்று.இந்த யோசனையை கந்தசாமியிடம் சொன்னபோது முதலில் புகையிலை போட்ட சிவந்த வாயால் காரைப்பற்கள் தெரி சிரித்து விட்டார்.
""தினசரி பத்து பத்து ரூபாயாக சேர்த்தா உன்னோட அறுபதாவது வயசில தான் நீ ஒரு லட்சத்தை கண்ணால பார்க்க முடியும். அது சேருதோ இல்லையோ ? '' என்றார்.
கந்தசாமி சிரித்ததாலோ, ஏளனமாக சொன்னதாலோ என்னவோ ""எனக்கு இந்த ஐடியா தான் சரின்னு படுது'' என்றார்.
அப்படி பத்து பத்து ரூபாயாக ஏற்கெனவே வைத்திருந்த வங்கிக் கணக்கில் செலுத்தத் தொடங்கினார் பொன்னைய்யா.
ஒரு கட்டத்தில் வங்கியில் பணத்தை பெறும் அதிகாரி இவருக்கு பத்துரூபாய் என்று பட்டப்பெயர் வைக்கும் அளவுக்கும் கூட வங்கியில் பிரபலமாகிப் போனார் பொன்னைய்யா. யார் ஏளனம் செய்தால் என்ன தன்னுடைய லட்சியம் ஒரு லட்சம் ரூபாய்கள் சேர்ப்பது! என்பது வைராக்கியமாகவே மாறிப்போனது பொன்னய்யாவிற்கு. அப்படிஒரு முறை வங்கி மேலாளர் பொன்னையாவை அழைத்து கேட்டே வீட்டார். பொன்னைய்யா தன்னுடைய ஒரு லட்சம் ரூபாய் சேமிப்பு ரகசியத்தை சொல்லவும். அவர் கணக்கு போட்டு பார்த்து வருசத்திற்கு 3 ஆயிரத்து அறுநாற்றி ஐம்பது ரூபாய் வரும். இப்படி முப்பது வருடங்கள் சேமிக்க வேணுமே! என்றார். அதற்கு பதிலடியாக ஒரு வருடம் சேர்த்து விட்டாலே எனக்கு வட்டி வரத்தொடங்கி விடுமே! என்றார் பதிலுக்கு. பொன்னைய்யா இப்படி சேமித்த பணம் தற்போது ஒருலட்சம் ரூபாயை தொட்டு விடும் நிலையில் இருக்கிறது. இதை நினைத்துப்பார்க்கும் போது பொன்னையாவிற்கு வயதும், வருடங்களும் கரைந்து போனதும், குழந்தைகள் பெரியவர்களாகி விட்டதும் தன் சேமிப்பைப்போல ஒரு கனவாகவே இருந்தது பொன்னையாவுக்கு.
இப்போது அந்த ஒருலட்சத்தை எடுக்கும் காலம் கனிந்து விட்டது. தன் சேமிப்புக்கு ஆதரவாக வங்கி கொடுத்த வட்டியும் சேர்த்து ஒரு லட்சத்தை இவர் கணக்கு செய்த காலத்திற்கு முன்பே தொட்டு விட்டது. ஆனாலும் , தான் தினசரி பத்து ரூபாயாகச்சேர்த்து ஒருலட்சத்தை பார்க்க வேண்டும் என்பது பொன்னையாவின் ஆசை. அதற்காக தினசரி காலண்டரில் தனியாக குறித்து வருகிறார். காரணம் வங்கிப்புத்தகத்தில் வட்டியும் சேர்த்து பதிந்துவிடுவதால் கணக்கில் குழப்பம் வந்துவிடுகிறது பொன்னய்யாவிற்கு.
சங்கையன் காந்தி மார்க்கெட்டில் மூட்டை துõக்குபவன் திடீரென கடைகளிலிருந்து பணத்தை கைப்பற்றி விடுவான், வரும் வாடிக்கையாளரின் பாக்கெட்டை பதம் பார்த்து விடுவான் அப்படி ஒரு முறை கையும் களவுமாக மாட்டிக்கொண்டான் ஆனாலும், சில சமயங்கள் அவனது குடும்ப நிலை கருதி மன்னித்து விட்டாலும் பல சமயங்களில் அவர்களே போலீசிலும் பிடித்து கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், விடுதலையாகி வெளியே வந்தால் மூட்டைத்துõக்கி ஒழுக்கமாக பிழைக்க வேண்டும் என்று நினைப்பான். பலர் இவனை ஏமாற்றி செய்யும் மோசடிகளால் மனம் நொந்து லம்பாக ஒரு அமவுண்ட் கிடைத்தால் பேசாமல் நாமும் ஒரு கடை வைத்து பிழைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தான் அப்படிப்பட்டவன் கண்ணில் தான் பொன்னைய்யா பட்டிருந்தார்.
அந்தப்பணத்தை எப்படியும் அபேஸ் செய்துவிடும் ஆசையில் சுற்றிக் கொண்டிருந்தான் சங்கையன். அது யாரிடம் என்பது தான் புரியாத புதிராக இருந்தது அவனுக்கு. வழக்கம் போல அவர் காலையிலிருந்து மூட்டைகளை சவாரி சொன்ன இடத்தில் கொண்டு விட்டு வந்திருந்தார். அவருக்கு கொஞ்சம் வயதாகிப்போனதால் சங்கையன் மூட்டைகளை ஏற்றி அடுக்கவும் , இறக்கி விடவும் உதவிக்கு வந்து கொண்டிருந்தான். மார்க்கெட்டில் பலரும் அவனை சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று சொல்ல, பொன்னையா மட்டும் அவன் தன்மகனை ஒத்த வயதுடையவன் குடும்பத் தேவைக்காகத் தானே திருடுகிறான். திருந்திவிடுவான்! என்று சமாதானம் சொல்லி விடுவார். ஒரு நாள் சங்கையன் பொன்னையாவை பதம் பார்த்து விடுவான் என்று எல்லோரும் சொல்லியும் அவர் அவனை நம்பத் தொடங்கினார். பொன்னய்யாவிற்கு முன்பு போல ஞாபகச்சக்தி அவ்வளவாக இல்லை. சங்கையன் இருப்பதால் அது அவருக்கு பேருதவியாக இருக்கிறது. இப்படியாக சவாரிக்கு சென்று வர உதவிக்கு வந்த சங்கையன் நாளடைவில் பொன்னய்யா சேர்த்து கொண்டிருக்கும் ஒரு லட்சம் ரகசியத்தையும், அதனால் வந்த பட்டப் பெயர் தான் ஒரு லட்சம் என்பதும் விளங்கிப்போனது.
எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு வருவதைப்போல அன்றைக்கு அவர்சேமித்த ஒருலட்சம் என்ற இலக்கை எட்டியது.
இன்றைக்கு அந்த பணத்தை எடுக்கலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த, அதே வேளையில் சங்கையனும் அந்த பணம் தனக்கு கிடைத்தால் நாமும் கவுரமாக வாழலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தான். அவர் தன் மீது வைத்திருக்கும் விசுவாசமும் கெட்டு விடக்கூடாது. பணத்தையும் துõக்கி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தான் அதற்கேற்றார் போல தன்னுடைய சகாவான துவாக்குடி பரமனை அழைத்தான்.
""வர்றதுல முப்பது உனக்கு . உன்வேலை இதுதான் அவர் பணத்தை எடுத்துக்கிட்டு வெளியே வந்ததும், அட்ரஸ் விசாரிக்க மாதிரி பணத்தை அபேஸ் பண்ணிடணும்'' என்றான்.
அவன் சொல்லி முடித்த நேரமோ என்னவோ, அன்றைக்கு மிகவும் நொந்துபோனான் சங்கையன் காரணம் அன்று முழுக்க பல சவாரிகள் வந்து கொண்டே இருந்தன. பொன்னய்யாவும் இதோ எடுத்து பார்த்து விடலாம் , அதோ எடுத்து விடலாம் என்று காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தார். அப்படி ஒரு நாள் இன்றைக்கு எடுத்து விடுவது. என்று முடிவெடுத்து அந்தப்பணத்தில் என்னவெல்லாம் வாங்கலாம் என்று கணக்கு போட்டார். அதில் மனைவிக்கு ஒரு பவுனும், தன்பங்கில் பத்தாயிரம் போக பிள்ளைகளுக்கு ஆளுக்கு இருபதாயிரம் பகிர்ந்து கொடுக்கலாம் என்று யோசனை தோன்றியது.
அப்படி எடுத்துக் கொண்டு அவர் வங்கியை விட்டு வெளியே வரவும். பரசுராமன் அவரை பின் தொடர்ந்து கொண்டே இருந்தான். அதே இடத்திற்கு சொல்லிவைத்தாற் போல சங்கையனும் பொன்னையாவின் வண்டியில் சவாரி போய்விட்டு வங்கிக்கு அருகே வந்தான். இன்றைக்கு பொன்னய்யா வண்டி ஓட்டப்போவதில்லை தான் சந்தோசத்தில்இருப்பதாகவும் இன்றைக்கு முழுக்க தன் வண்டியில் ஓட்டி சம்பாதித்துக் கொள்ளும் படியும் கூறியிருந்ததால் சங்கையன் அன்று சவாரிக்கு சென்றான்.
அப்போது தான் பொன்னய்யாவைப்பார்ப்பது போல "" என்ன களைச்சுட்டீங்க பேங்குக்கு போயிட்டு வர்றீங்களா? வாங்க டீக்கடைக்கு போயிட்டு போகலாம். கொண்டு வந்து வீட்ல விடறேன் '' என்றான். முதலில் மறுத்த பொன்னயாவுக்கும் டீகுடிக்கும் எண்ணம் வரவே ""சரி'' என்று தலையசைத்தார்.
அதே கடைக்கு பரசுராமன் பெரிய முதலாளி போன்ற தோற்றத்தில் கையில் பெரிய சூட்கேஸ், பேக் சகிதமாக வர சங்கையன் அவனை நலம் விசாரிப்பது போலவும் , தனக்கு தெரிந்த பெரிய முதலாளி என்றும் காட்டிக்கொண்டு தான் முன்பு வேலை பார்த்த முதலாளி என்றும் காட்டிக்கொண்டான். அவரிடம் தான் வாழ்க்கையில் முன்னேற உதவும் படியாகக் கூற அவனும் சரி என்றான். பொன்னய்யா மிக யதார்த்தமாக அவனிடம் சங்கையனை பற்றி நல்லவிதமாக சொன்னார். தன்னை வீட்டில் வந்து பார்க்கும் படியாகக்கூறினான் பரசுராமன். பொன்னயாவிற்கு முன்பு பவ்யமாக "சரிங்க முதலாளி ' என்று சைகை செய்த சங்கையன் குறிப்பை உணர்ந்த பரசுராமன். சமயம் பார்த்து டேபிள் மீது பொன்னய்யா வைத்திருந்த பணப்பையை தன் பேகினுள் கொண்டு வந்திருந்தான். உடனே தான் புறப்படுவதாக சொல்லி புறப்பட்டான் பரசுராமன் டீ, பன்னுக்கு தானே பணம் கொடுப்பதாக பரசுராமன் பணம் கொடுத்தான். அவன் புறப்பட்டு சென்றபிறகு இவர்களும் புறப்பட்டார்கள். பை மாறியது சங்கையனுக்கு மட்டும் தெரிந்திருந்தது. பெரியவர் வீட்டிற்கு போனதும் குமுறப்போகிறார் என்று நினைத்துக் கொண்டான்.
அதேசமயம் ஆட்டோபிடித்து போக எண்ணிய பரசுராமன் ஒரு ஆட்டோவில் ஏறிக் கொள்ள குறிப்பிட்ட ஒரு இடம் வந்து நிறுத்தி "இங்கேயே இரு பணத்தை கொடுத்தனுப்புகிறேன்' என்று ஆட்டோ டிரைவரிடம் சொல்லிவிட்டு வேறு வழியாக தப்பித்தான் பரசுராமன். அப்படி அவன் ஆட்டோவில் வரும்போது பணம் இருக்கிறதா என்று சோதித்துப்பார்க்க பேக்கைதிறக்க பிதுங்கி வழிந்த பேக் ஜிப் அறுந்துபோனது அதை சரி செய்ய முயன்ற நேரம் அதிலிருந்த பொருட்களை கீழே எடுத்து வைத்தான் பரசுராமன் அப்போது நழுவி சீட்டுக்கு பின்புறம் விழுந்த பணப்பையினுள் இருந்த இன்னொரு பையை அவன் கவனிக்க வில்லை. அவன் பொன்னய்யாவின் பையை அபகரிக்க அதேப்போல மஞ்சள் பைகள் இரண்டு மூன்றை எடுத்து அதனுள் லாட்டரி சீட்டுகட்டுகளை எடுத்து அடுக்கிக் கொண்டு வந்திருந்தான்.
இப்போது பொன்னயாவை வீட்டிற்கு கொண்ட வந்து விட்டிருந்தான் சங்கையன். அங்கிருந்து அவர் புலம்பு வதைப்பார்க்க விரும்பாதவனாய் அவரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.
வீட்டில் பையை திறந்தவருக்கு அதிர்ச்சி.
பொன்னய்யாவால் யார் மீதும் குற்றம் சுமத்த முடியவில்லை. காக்கா தண்ணீர் தொட்டியில் கல்லைப்போட்டு தண்ணீர் குடித்தது போலல்லவா அந்த ஒரு லட்சம் தினசரி பத்துப்பத்தாக ஒரு லட்சம் அல்லவா!! மயக்கம் வருவது போலிருந்து அவருக்கு. யார் எடுத்திருப்பார்கள். அந்தமுதலாளி மிகுந்த செல்வாக்குள்ளவன் அவன் எடுக்கப்போவதில்லை. ஒருவேளை கடையில் டீ யும், பன்னும் கொண்டுவந்த வைத்த கடைக்காரனாக இருக்குமா? இல்லை. பணத்தை எடுத்து வைத்து வங்கி அதிகாரியை பார்த்து பேசிய சமயம் அவரது மேஜையில் வைத்துவிட்டோமா? இப்படி குழப்பமான எண்ணங்கள் அவருக்கு மேலும் துக்கத்தை அதிகப்படுத்தவே செய்தது. பத்து பத்து ரூபாய்....ஒரு லட்சம் முப்பது வருடங்கள்.... கணக்கு போட்டு பார்த்து மேலும் மேலும் வருத்தங்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தது மனசு.தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்து விட்டார். மனைவியோ ஒரு லட்சம் சேர்த்திருக்கேன்னு பொய் தானே சொன்னீங்க. என்றால். அப்போது தான் வங்கிக்கணக்கு புத்தகத்தை காட்டத்தேட அதுவும் பணத்தோடு போயிருந்தது உரைத்தது. உண்மையை நம்ப வைக்கவும் அவனரால் முடியவில்லை. காரணம் இதுவரை அதற்கான பாஸ்புத்தகத்தைக்கூட மனைவியிடம் காட்டியதில்லை அவர். காரணம் பணம் இருப்பது தெரிந்தால் செலவுக்கு வேண்டும் என்று பிய்த்து பிடுங்கிவிடுவாள் என்பதால்.
அப்படி சேமித்த பணம் யார்கைக்கு கிடைத்ததோ.. உச்சி பிள்ளையாரப்பா என்று மனம் குமுறினார்.
அந்த ஆட்டோக்காரன் பரசுராமன் வருவான் என்று பொறுமையிழந்து அந்த அலுவலகத்திற்குள் செல்ல அப்படி யாரும் இங்கே வரவில்லை என்றார்கள். பியூன் வந்து இன்னொரு வழியைக் காட்டி போய்விட்டார் என்றான்.
ஆட்டோக்காரர் திட்டாத குறையாக அலைந்துவிட்டு அந்த டென்ஷனைப் போக்கிக் கொள்ள டீக்கடைக்கு சென்றார். அங்கிருந்த நாளிதழை புரட்டியபடி ஒரு டீயை குடித்துவிட்டு தன் ஆட்டோவிற்கே திரும்பினார் சோர்வாக.
மனைவி சொன்னாள் ""சங்கையன் ஏதாவது பண்ணியிருப்பானோ?''
""ச்சே..ச்சே அவன் திருந்திட்டான். முன்னே மாதிரி இல்லை அவன்.ரொம்ப மாறிட்டான் '' என்றார்.
"" போலீஸ்ல சொல்லிப்பார்த்தா என்ன? அவனுக்கு தெரியுமே யார் திருடறாங்க, யார் கொலைகாரங்கன்னு .. அப்படியே கிடைச்சாலும் பங்கு போட்டுப்பாங்க . சொல்லமாட்டாங்க. எழுதிவாங்கிட்டு சொல்றேம்போம்பாங்க. நாம என்ன ரூபா நோட்டு நம்பரா வெச்சிருக்கோம் . அதைக்கண்டுபிடிக்கறதுக்கு. பெத்த பிள்ளைகளே திருவிழாக்கூட்டத்தில காணாம போறமாதிரி , ஒரு லட்சம் பணம் அது வும் புது நோட்டாத் தர்றேன்னாரு மேனேஜரு.. நான் என்ன பிரேம் போட்டு வைக்கவா போறேன். பழைய நோட்டுப்போதும்னு சொன்னேன். எவன் கைக்கு கிடைச்சுதோ'' என்று நொந்து கொண்டிருந்த வேளையில்..
வாசலில் இரண்டு பைக்குகள் வந்து நின்றன. அதிலிருந்து காக்கி உடையில் ஒருவரும், இன்னொருவர் பேக் சகிதம் தோளில் கேமராவுடனும், இன்னொரு வர் காக்கி சட்டை மட்டும் அணிந்து கொண்டு வந்திருந்தார்கள். தன்னுடைய ஆட்டோவில் பணப்பை கிடைத்ததாகவும்,அதில் இருந்த வங்கிக் கணக்கு புத்தகத்தில் முகவரி பார்த்து வந்ததாக கூறினார்கள் அவர்கள்.
முழங்கால் இறுகிப்போக, நரம்பு தெறிக்க சுமைகளை தாங்கி க்கொண்டு, மிதித்து உழைத்த காசு ஒரு லட்சம் வீடு தேடி வந்ததற்கு உச்சி பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதாக, தாயுமானவருக்கு நன்றி சொன்னார் பொன்னையா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment