Wednesday, January 19, 2022

சாதனைக்கலைஞன் ஒளிப்பதிவாளர் அசோக்ராஜன்

 

 

நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து”, நடிகர் சரத்குமார் நடித்த, “நாட்டாமைஉள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வெற்றித் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஒளிப்பதிவாளர் அசோக்ராஜன்





இவரது திரைக்குடும்பப் பின்னணி குறித்து:



மறைந்த முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் திரு.கருணாநிதியின் கைவண்னத்தில் எழுதி, மறைந்த நடிகர் செவாலியே டாக்டர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பராசக்திதிரைப்படத்தின் பன்முக இயக்குனர் திரு.கிருஷ்ணன் பஞ்சுவின் குடும்பத்தில் இருந்து வந்தவர். திரு.கிருஷ்ணன்பஞ்சு அசோக் ராஜன் தாய்மாமன் ஆவார்.



மறைந்த நடிகர் செவாலியே டாக்டர்சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பாசமலர் திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் திரு.பீம்சிங் இவருடைய சித்தப்பா அசோக் ராஜன் ஆவார்.



நடிகர் ரஜினிகாந்த் நடித்த காயத்ரி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பட்டு என்கிற ஆர்.பட்டாபிராமன் இவருடைய தாய்மாமன் ஆவார்.



இத்தகைய திரை ஆளுமைகள் நிறைந்த குடும்ப பிண்ணனியில் இருந்து வந்த இவருக்கு இயற்கையாகவே திரையும் கைக்குள் வந்தது. இவரது கைக்குள் மட்டுமல்ல, கண்களில் ஒளிர்ந்திருந்தது. அதுவே இவரை திரைப்படத்துறையில் ஒளிப்பதிவாளராக்கியது.





இவரது திரைப்பட பணி:



ஒளிப்பதிவாளர் அசோக்ராஜன் இளமை வாழ்க்கையில் தனது உறவினர்கள் திரைப்பின் புலத்தில் ஆரம்பம் முதலே ஒளியும், படச்சுருள்களும் அவரது கவனத்தை ஈர்த்தன.

ஒளிப்பதிவாளர் அசோக்ராஜன் 1981- இல் உதவி ஒளிப்பதிவாளராக திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். இயக்குநர் பாரதிராஜா திரைப்படங்களில் ஒளிப்பதிவாளர் பி.கண்ணனுடன் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.



இணை ஒளிப்பதிவாளராக 35 படங்களுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.



இயக்குநர் திரு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன் திரைப்படம் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் மொத்தம் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.





தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராக உள்ளார்.







ஒளிப்பதிவாளராகபணியாற்றியதிரைப்படவிபரங்கள்:



  •  

நடிகர்ரஜினிகாந்த்நடித்து, இயக்குநர் திரு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான முத்துதிரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

  • நடிகர்சரத்குமார்நடித்து, இயக்குநர் திரு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நாட்டாமை”.
  •  நடிகர்கார்த்திக்நடித்து, இயக்குநர் திரு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான பிஸ்தா”.
  • இயக்குநர் திரு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ஊர்மரியாதை, நட்புக்காக, புத்தம் புது பயணம், புருஷ லட்சணம், பெரிய குடும்பம், எதிரி, என்னவளே
  • நடிகர் அஜீத் நடித்து, இயக்குநர் திரு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான வில்லன்
  • நடிகர்பிரபுநடிப்பில், இயக்குநர் திரு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான பரம்பரை
  • நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா”.
  • இயக்குநர் கஸ்தூரிராஜா இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமைமற்றும் காதல்ஜாதி
  • இயக்குநர்பி.வாசுஇயக்கத்தில், நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான பொண்ணு வீட்டுகாரன்”.

  •  
    நடிகர் பாண்டியராஜன் நடித்து, தயாரித்து, இயக்கியஹெல்ப்என்ற குறும்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார்.


விருதுகள்:




  • நட்புக்காக திரைப்படத்திற்க்கு பாரத் கல்சுரல் அகாடமி விருதினை பெற்றுள்ளார்.
  • 2008ம் ஆண்டு சன்டிவியில் ஒளிபரப்பான சிவசக்திதொலைக்காட்சி தொடருக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசின் விருதை மறைந்த முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் திரு.கருணாநிதி அவர்களிடம் பெற்றுள்ளார்.

 

Friday, September 5, 2014

வெப்பம் தணிக்கும் கற்றாலை ஜுஸ்



தேவையான பொருட்கள்: சோற்றுக்கற்றாலை, பால், சர்க்கரை, ஐஸ்கட்டி,மோர்


செய்முறை: வீட்டின் கொல்லையில், தோட்டத்தில் விளையும் சோற்றுக்கற்றாலை ( முற்றிய பதத்தில்)யை பறித்து, அடிபாகம், நுனிபாகம் மற்றும்தோல் அகற்றிவிட்டு, உள்ளே இருக்கும்  சோற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதைமோரில்  சிறிது நேரம் ஊறவைத்து அலசி ( கசப்பு தன்மை நீங்கும் வரை) எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு, பாலைகாய்ச்சிக் கொள்ள வேண்டும். மிக்ஸியில்  பால், கற்றாலை சோறு, சர்க்கரை , ஐஸ்கட்டி போட்டு  அரைத்து எடுத்தால்  கற்றாலை ஜுஸ்ரெடி. இதை எளிதாக வீட்டிலேயே செய்யலாம்.
காபி, டீக்கு மாற்றாக இதை காலை,மதியம், மாலை என எந்தப்பொழுதிலும் பருகலாம்.
தகிக்கும் வெயிலுக்கு குளிர்ச்சியையும் , உடல் ஆரோக்கியத்தை தரும்.

கம்ப்யூட்டர் முறையில் நவீனஅறுவைசிகிச்சை








டாக்டர் முத்துக்குமார் . முதன்மை எலும்பு முறிவுஅறுவை சிகிச்சை நிபுணர் பேட்டி
-------------------------------------------------------------------------------
மாறிவரும் நவீனத்திற்கேற்ப மருத்துவத்துறையிலும் பல புதுமைகள் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. முன்பெல்லாம் அறுவை சிகிச்சை என்றால் சில நாட்களுக்கு முன்பே படுக்கை வசதியில் காத்திருந்து அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டு அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்த காலமெல்லாம் இன்று மலையேறிவிட்டது. காலமாற்றத்திற்கு ஏற்ப உடலில் ஏற்படும் நோய்களை கண்டறிய பலவிதமான சோதனைகளும், சோதனை முறைகளும், சோதனைக் கருவிகளும் நடைமுறைக்கு  வந்துவிட்டன. தமிழகத்தின் தலைநகரான சென்னையைப்பொருத்தவரை தென்சென்னைப்பகுதியான தாம்பரத்திலிருந்தே தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களுக்கு பயண வசதிகள் தொடங்குகின்றன. அத்தனை பரபரப்பாக இருக்கும் நவீன சாலைவசதி கொண்ட சென்னையில்  எதிர்பாராமல்  வாகனங்களால் ஏற்படும் விபத்துகளுக்கு  அவசர சிகிச்சை அளிப்பதற்கென்றே  நவீன கருவிகள் கொண்ட  நுண்மதி அறுவை அரங்கத்தை (இண்டலிஜென்ஸ் ஆப்பரேஷன் ரூம்) உருவாக்கியிருக்கிறார்கள் பார்வதி ஆஸ்பிட்டல் நிர்வாகத்தினர்.
இத்தகைய அரங்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கருவியின் செயல்பாடு அதன் மூலம் அவசர உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கான உதவிகள் எப்படி செய்யப்படுகின்றன என்பது குறித்து விளக்கமாக அறிய டாக்டர் முத்துக்குமார் முதன்மை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணரை சந்தித்துப்பேசினோம்.

“2004 ல் ஆகஸ்டு 24ந்தேதி பார்வதி மருத்துவமனை தொடங்கப் பட்டது . நெடுஞ்சாலைகளில் ஏற்படும் எதிர்பாராத விபத்துகளுக்கும், பாதிக்கப்பட்டு விபத்துக்கு ஆளானவர்களை காப்பாற்றவும்  இந்த மருத்துவமனை மிகச்சிறந்த உதவிமையமாக செயல்பட்டு வருகிறது.விபத்து ஏற்பட்டதும் அவர்களுக்கு முதலில் தேவையானது அவசர உதவி. அதற் கு எந்த நேரத்திம் எங்கள் மருத்துவமனை தயாராகவேஇருக்கிறது. தென்சென்னையை பொருத்தவரை இத்தகைய நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனை  மிகவும் குறைவு என்பதால் எங்களது மருத்துவமனையில் நவீன வசதிகளை கொண்ட கருவிகளை இறக்குமதி செய்திருக்கிறோம்.

தற்போது மிகஅதிநவீன ஸ்கேனிங் மெஷின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முன்பெல்லாம் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்தால் அதன் ஆயுள் காலம் அதிகபட்சம் 15 ஆண்டுகள் தாங்கும். மைக்ராஸ்கோப் உதவியுடன், எக்ஸ்ரே படத்தின் துணையுடன் அறுவை சிகிச்சையை மேற்கொள்வோம். தற்போது கம்ப்யூட்டர் முறையில் முப்பரிமாணத்தில் பாதிக்கப்ப்டட பாகங்களை மிக துல்லியமாக படம் பிடித்துக் காட்டும் கணிணி ஸ்கேனிங் மெஷின் மூலம் அறுவை சிகிச்சை செய்கிற போது  சரி செய்யப்பட்ட எலும்பு மாற்று அறுவைசிகிச்சையின் பலனானதும், அதன் ஆயுளும் 20-25 ஆண்டுகள் நிலைத்திருக்கும்.  உலகஅளவில் எட்டாவதாக பார்வதி மருத்துவமனையில் நுண்மதி கொண்ட அறுவை சிகிச்சை அரங்கத்தை நிர்மாணித்திருக்கிறோம்.
சிடி ஸ்கேனிங் மூலமாக எலும்பு, மூளை பாகங்களில் ஏற்பட்டிருக்கும் நோய்களையும், பாதித்த பாகங்களையும் மட்டுமே கண்டறிய முடியும். ஒரு மருத்துவநிபுணரால் மைக்ராஸ்கோப் லென்ஸ் மூலமாகவோ, நேரிலோ மூட்டு,மற்றும் மூளையின் நோயியல் கூறுகளின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தான் பார்க்கமுடியும். அதிலிருந்து மாறுபட்டு  நுண்மதி கொண்ட அறுவை அரங்கத்தில் வைக்கப்பட்டிருக்கிற கம்ப்யூட்டர் மெஷின் மூலம் முப்பரிமாணங்களில் நோயியல் கூறுகளின் வெவ்வேறு பரிமாணப்படங்களை மிகத்துல்லிமாக பார்த்து நோய் பாதித்த பகுதிகளை  கண்டறிய முடியும். அதன் மூலம் மிகத்துல்லியமாக அறுவை சிகிச்சை செய்யவும் முடியும்.
உதாரணமாக முதுகுத்தண்டுவடத்தில் கேன்சர் கட்டி, எலும்பு மூட்டுகளில்  அடிப்பட்டிருக்கிறது.  பாதிக்கப்பட்ட இடத்தில்  ஒரு அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என்றால் இங்குள்ள ஆபரேஷன் தியேட்டரில் நோயாளியை படுக்க வைத்து விட்டு, கணிணி திரையில் நாம் அவருடைய நோய்களையும்,  காயம்பட்ட இடங்களையும் வேறொரு அரங்கில் இருந்தபடி கணிணி திரையில் கண்காணிக்க முடியும். வெவ்வேறு பரிமாணங்களில் தெரியும் துல்லியமான படத்தைக் கொண்டு முதுகுத்தண்டை ஒட்டியிருக்கும் ரத்தக்குழாய் பாதிக்காதவாறு மில்லிமீட்டர் அளவு இடைவெளியில் பிளேட்டுகள் வைத்து முதுகெலும்பு தண்டுவடத்தை சரிசெய்து ஸ்குரூ மூலம் இணைக்க முடியும். முன்பெல்லாம் வெறும் கண்ணாலு<ம், மைக்ராஸ்கோப் மூலம் பார்த்து பார்த்தே பொருத்தினார்கள். தவிர அப்படி ஸ்கேனிங் செய்யும் போது நோயாளிகள் மீது செலுத்தப்படும் எக்ஸ்ரே கதிர்கள் மருத்துவர்களையும் பாதிக்கும், தவிர சரியான மனநிலையில் மருத்துவர் இருந்து சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். கவனம் தவறும் சமயத்தில் அறுவை சிகிச்சையில் தவறுகள் நேர்ந்து விடவும்  வாய்ப்புகள் உண்டு. அப்படி மாறும் மனநிலையை சமநிலைப்படுத்த இங்கே அறுவை சிகிச்சை செய்யப்படும் அரங்கம் மெல்லிய விளக்குகளால் மனதை சமப்படுத்தும் படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே சாதனங்களையும் நவீன வசதிகளையும் கொண்ட வெவ்வேறு மருத்துவ மனைகளி லிருந்து இங்கே நடக்கிற அறுவை சிகிச்சைகளை கண்களால் பார்த்துக் கொண்டே மற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள் நமக்கு அறிவுறுத்த முடியும்.

எலும்பு மூட்டு மாற்று  அறுவை சிகிச்சையில் இனி நல்ல பயனை எதிர்ப்பாக்கமுடியும். தமிழகத்தில் பார்வதி ஆஸ்பிடலில் மட்டுமே இத்தகைய வசதிகள் இருக்கின்றன.

ஆசியாவில் மூன்றாவது இடத்தில் பார்வதி ஆஸ்பிடலில் இந்த வசதி இருக்கிறது. சாதாரண பொதுமருத்துவரால் இந்த வசதிகளை கையாளவோ, செயல்படுத்துவதென்பதோ சற்றே கடினமானது. அறுவை சிகிச்சையில் குறிப்பிட்ட துறை சார்ந்த நிபுணரால் மட்டுமே கையாள முடியக்கூடிய வசதியினைக் கொண்டது இது. இதை தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா திறந்துவைத்தார்.
இதுவரை 160 பேர் பயன் பெற்றிருக்கிறார்கள்.  முன்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு  ஏற்பட்ட செலவினை விட மிகவும் குறைவான செலவிலேயே இத்தகைய நவீன  வசதியில் அறுவை சிகிச்சையை செய்து கொண்டு நலமாக வாழ முடியும் ” என்றார்.

பாக்ஸ் மேட்டர்
---------------------
துண்டான கை நவீன சிகிச்சைமூலம் சேர்ப்பு
--------------------------------------------
வடமாநிலத்தைச்சேர்ந்தவர் ஜிதேந்தர் சவுகான் (27) சென்னைப் புறநகரில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவருடைய வலது கை துண்டானது. விபத்து நடந்த இரண்டு மணிநேரத்தில்  குரோம்பேட்டையில் உள்ள பார்வதி ஆஸ்பிடலில் ஜிதேந்தர் சவுகான் சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சைப்பிரிவில் ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் ராஜராஜன்வெங்கடேசன்  தலைமையில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்த் தொடங்கினர். வலது கால் தொடை ப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட  ரத்தக் குழாயை நவீன அறுவை சிகிச்சை மூலம்  கையில் பொருத்தி துண்டான கையை மீண்டும் இணைத்தார்கள்.

பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியிலும், சீரமைப்பு சிகிச்சைகளை அளித்தனர். நான்கு நாட்களுக்குப்பிறகு பழைய நிலையில்  ஜிதேந்தர்சவுகானுக்கு கைகளில் அசைவு ஏற்பட்டு பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார். தற்போது குணமாக இருக்கிறார். 

-செல்வகுமார்

செம்மொழி ஆய்வுநுõல்கள் பற்றி முதல்வர் மறுபரிசீலனை செய்யவேண்டும்



பேராசிரியர் முனைவர்.சாமி .தியாகராசன் வற்புறுத்தல்
------------------------------------------------------------
உலகச்செம்மொழித்  தமிழ் மாநாடு கூடுகின்ற இவ்வேளையில்  உலகெலாம் நம் தமிழின் பெருமையை  பேசும்  இலக்கியங்களும், அதன் தன்மைகள் குறித்தும் ,  ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிற புத்தகங்கள், அவற்றை பதிப்பித்தல் சம்மந்தமாக ஏற்படும் குறைகள் பற்றியும் திராவிடர் சான்றோர் பேரவையின் தலைவர் பேராசிரியர் முனைவர். சாமி. தியாகராசன் அவர்களை சந்தித்துப் பேசினோம்.

*உலகசெம்மொழி மாநாடுபற்றி தங்கள் கருத்து என்ன?செம்மொழி தழிழாய்வ நிறுவனம் தமிழக அரசின் அங்கமா? மத்தியஅரசின் அங்கமா?
 ஏறக்குறைய 108  ஆண்டுகளுக்கு முன்பு பரிதிமாற் கலைஞர் தொடங்கி  தொடர்ச்சியாக தமிழ் பெருமக்கள் கண்டுவந்த கனவை நனவாக்கி தமிழ்மொழி செம்மொழி தான் என மத்திய அரசு ஒத்துக் கொண்டு  அதற்கான தகுதியை  தருவதற்கு பெருமுயற்சி எடுத்து அந்தத்தகுதியை பெற்றுத்தந்த கலைஞர் அவர்களை மிகவும் பாராட்டவேண்டும்.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்  மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ்  இயங்கும் இந்திய மொழிகளின் ஒரு அமைப்பு. அதன்  ஓர் அங்கம் தான் செம்மொழி தமிழாய்வு நிறுவனம்.  இந்த நிறுவனத்தின் சார்பில்  தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம்  செம் மொழி தமிழ் உயராய்வு மையம்   ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்னும் சில அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
செம்மொழி தமிழ் மேம்பாட்டுவாரியம் மற்றும் தமிழ் உயராய்வு மையம்  ஆகியவற்றுக்கு  தலைவராக இருப்பவர்   பேராசிரியர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் . அந்தமையம்  கி.பி 6ம் நுõற்றாண்டுக்கு முந்தைய  செம்மொழித்  தமிழ் நுõல்களை  மையப்படுத்தி  அந்த காலவரிசைக்குட்பட்ட  நுõல்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

* அந்தநுõல்கள்   செம்மொழி அந்தஸ்த்துக்கு உரியதுதானா?
கி.பி.6ம்  நுõற்றாண்டு வரையிலான 41 நுõல்கள் பழந்தமிழ்நுõல்கள் என வரையறை செய்து  ஆய்வு செய்யப்படுகின்றன.
1.தொல்காப்பியம்(1)
2.பத்துப்பாட்டு(10)
3.எட்டுத்தொகை(8)
4.பதினெண்கீழ்க்கணக்கு(18)
5. சிலப்திகாரம்(1)
6.மணிமேகலை(1)
7. முத்தொள்ளாயிரம்(1)
8. இறையினார் களவியல்(1)

*மத்திய தமிழாய்வு நிறுவனத்தின் திட்டப்பணிகள் என்ன?
1.முதலில் நுõல்களின் செம்பதிப்புகளை கொண்டு வருவது 2.மொழிபெயர்த்தல்3.வரலாற்று முறையில்  தமிழ் இலக்கணத்தை வகுத்தல் 4. தமிழின் தொன்மை பற்றி பண்முக ஆய்வு செய்தல்.

* செம்மொழி, செவ்வியல் மொழி என்றால் என்ன?பழந்தமிழ் நுõல்களுக்கும் செவ்வியல் நுõல்களுக்கம் என்னவித்தியாசம்?   

ஒரு மொழி இலக்கண வளமை பெற்று அதன் வளமைக்கு காரணமான  இலக்கியங்களை  பெற்றிருக்குமேயானால்  அதனை செம்மொழி  (செவ்வியல் மொழி ) என்று கூறலாம். ஒரு சமூகம்  வாழ்க்கையில்  கொண்டிருந்த ஒழுக்கத்தையும்,  அதன் அகம் புறம் என வாழ்க்கையின் மேன்மையை  இலக்கியமாக  படைத்தல். பல  கலைகளோடு போற்றிவந்தது ,  இல்லற வாழ்வின்  மதிப்பு, தனி வாழ்விலும், கலைஇலக்கிய வாழ்விலும் மிகவும் சிறந்திருந்தது. சமூகத்தின்  எல்லா இடத்திலும்  பெண்கள் மேன்மை பெற்றது.  மக்களுக்காகவே மன்னன் வாழ்ந்தது போன்ற  வாழ்வின் கூறுகளை  உள்ளடக்கிய  இலக்கிய ங்களைத்  தான்  செவ்வியல் தன்மை என்கி றோம்.
சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நுõல்கள் தான் இந்த செவ்வியல் தன்மை பெற்றுள்ளது.பதினெண் கீழ்க்கணக்கு  நுõல்கள் பழைமையான இலக்கியங்கள்  என்ற வரிசையில்  இடம் பெறும். ஆக, செவ்வியல் நுõல்களும் எனப்பெறும் பழைமையான நுõல்களும்  ஆய்வுக்கு  உட்படுத்தப்படுகின்றன என்று சொல்லும் போது  பழைமையான இலக்கியங்கள் வரிசையில்  பக்தி இலக்கியங்கள் சொல்லப்படவில்லை. பதினெண் கீழ்கணக்கு நுõல்களில் செவ்வியல் தன்மை அதிகம் காணப்படவில்லை.



*பக்திஇலக்கியங்களில் செவ்வியல் தன்மை உள்ளதா? தமிழ் உயராய்வ மையம் வகுத்த நுõல்களின்  காலவரையறைக்கு நீங்கள் உட்படுகிறீர்களா?
 கிபி 6ம்நுõற்றாண்டு தொடங்கி 15 ம் நுõற்றாண்டு வரையிலான பக்தி இலக்கியங்கள் அந்த வரிசையில் இடம் பெற்று அத்துடன் செவ்வியல் தன்மையும் பெற்றுள்ளன.
செவ்வியல் தன்மையை   சமய இலக்கியங்கள் பெற்றுள்ளன. என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். 
 மணிமேகலை எனும் சமய இலக்கியத்தில்  செவ்வியல் தன்மைக்கான  இலக்கணத்தை  அதிகமாக பார்க்கமுடியாது.  செவ்வியல் தன்மை  முழுமையாக உள்ள  சைவ, வைணவ இலக்கியங்களை   ஆய்வு மையம்   ஒதுக்கியுள்ளது.  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்    சமயஇலக்கியங்களையும்  ஆய்வுக்கு எடுத்துக்கொண்டால் தமிழர் பெருமையை உலகு <உணரும். அவர்கள் கூறும் காலவரையறைக்கு என்னால் உடன்பட முடியாது.
 அந்த வரையறையை விட்டுவிட்டு,  கிபி6ம்நுõற்றாண்டு வரையிலான நுõல்களை முதற்கட்டம்,  கிபி 7ம்நுõற்றாண்டு தொடங்கி   இலக்கண இலக்கிய நுõல்களை  இரண்டாம் கட்டம் என ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என   செம்மொழி தமிழாய்வு நிறுவனம்  முடிவு செய்தால் நன்றாக இருக்கும்.


* இருண்டகாலம், பக்திஇயக்கம் என்றால் என்ன?
தமிழ் வரலாற்றில்  களப்பிரர் ஆட்சிக்காலத்தை இருண்டகாலம் என்பர்.   பதினெண் கீழ்க்கணக்கு நுõல்களைப்  பார்க்கையில் தமிழ் பண்பாட்டிற்கு நேர் எதிரான காரியங்களே அதிகமாக நடந்திருக்கின்றன. சமண சமயத்தால்  தமிழ்பகைமை உணர்வு வளர்க்கப்பட்டது. தமிழர்களின் உணர்வை  இது பாதித்தது. அக்கால கலையும் அரசின் துணை கொண்டு தமிழ்விரோத செயல்களை செய்ததால் சமய வாதிகளை எதிர்த்து மக்கள் இயக்கம் தோன்றியது.   இந்த காலகட்டத்தில் தோன்றிய இலக்கியங்களை  பக்தி இலக்கியங்கள் என்று கூறினர். பக்தி எனும் உணர்வு மக்களை ஒன்று சேர்த்ததால்  இதனை பக்தி இயக்கம் என்றனர். மேம்போக்காக பார்க்கும் போது இந்துசமயம் போராட்டம் போல் தோன்றினும்  தமிழ்பண்பாட்டிற்கு  புத்துயிர் அளித்து,  தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட  ஆர்வம்  எனலாம். 

*தமிழ்ப்பகைமை என்றால் என்ன?
இல்லறவாழ்க்கையை விட துறவற வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தந்தது. இது தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானது. இதை பக்தி இயக்கம் எதிர்த்தது. சமய உலகில் பெண்களுக்கு சிறந்த இடத்தைக்கொடுத்ததுபக்தி இயக்கம். சங்கத்தமிழ் பண்பாட்டின் அகப்பொருள் மரபினை உயிர்பித்துக் கொடுத்தது. இசை, நடன,ஓவிய  கலைகளும் வாழ்க்கைக்கு முக்கியம் என வலியுறுத்தப்பட்டது.
மானிடப்பிறவியாகிய ஒரு பெண்ணை சிவபெருமான் ‘ அம்மை’ என அழைத்ததைக் கொண்டு பெண்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை நாம் உணரலாம் . 



*செம்பதிப்பு என்றால் என்ன?தனிஒருவர் மேற்பார்வையில் நுõல்கள் பதிப்பித்தால் அவை சிறக்குமா? வல்லுநர் குழு அமைத்து சிறப்பித்தால் அவை சிறக்குமா?
மிகுந்த பொருட்செலவில் பளபளப்பு காகிதத்தில் அழகாக பதிப்பிக்கும்   நுõல்கள் செம்பதிப்பு ஆகிவிடாது.  உண்மையான பொருள்,  அர்த்தங்களோடு  நுõலில் எந்தகுறையும் இல்லாமல்,   வரலாற்று ப்பிழைகள் இல்லாத ஒரு நுõலைப் பதிப்பிப்பதே செம்பதிப்பு ஆகும். எந்தவசதியும் இல்லாத காலத்தில்   உ.வே.சா அவர்கள்  பதிப்பித்த நுõல்களைக்காட்டிலும் பிற்காலத்தில் பதிப்பித்த நுõல்கள்  தமிழறிஞர்களால் போற்றப்படவில்லை.காரணம் அந்தப் பதிப்பில் காணப்படும் குறைகள் . ஆதலால் மொழி வல்லுநர் குழு மேற்பார்வையில்  நுõல்கள்  பதிப்பிக்கப்பட வேண்டும்.

*வல்லுநர் குழு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் ?
தமிழில் சிறந்த மொழியியல் அறிஞர்களை  ஆய்வுமையம் தேடிச்செல்லவேண்டுமே தவிர வல்லுநர்கள் தானே  வருவார்கள் என எதிர்ப்பார்க்கக் கூடாது. திருச்சிற்றம்பலம் எனும் சிற்றுõரில் தான் அறிஞர்.மு. அருணாச்சலம்  இருந்தார்கள். இதுபோன்ற அறிஞர்களை தேடிப்பிடிக்கவேண்டும். ஆய்வுமையம் ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களை குழு உறுப்பினராக நியமிக்கக்கூடாது.   உதாரணமாக: வாழும் திருகுறளைப் பற்றிய ஒரு ஆய்வுக்கு   பேராசிரியர். இரா.சாரங்கபாணி போன்றவர்களை  அணுகி செய்தியை வாங்க வேண்டும்.
தொல்காப்பியத்திற்கு- தமிழண்ணல், திருக்குறளுக்கு - சாரங்கபாணி, பெரியபுராணம்-தி.நா.ராமச்சந்திரன், இப்படி  ஒவ்வொரு நுõலையும்  பதிப்பிக்கும் முன்பு இதுபோன்ற பேரறிஞர்களை தேடிப்பிடிக்க வேண்டும். அவர்கள் மேற்பார்வையில் நுõல்கள் வெளிவர வேண்டும்.ஒப்பந்த அடிப்படையில் ஆய்வுப்பணிகளை ஒப்படைக்கக்கூடாது.
சங்ககாலம் தொடங்கி இன்று வரை சமயம் இல்லாத ஒரு தமிழர் வாழ்வை பார்க்கமுடியாது.  இது மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு நான் சொல்கிற  என்பணிவான கருத்தாகும்.

தொகுப்பு: செல்வகுமார்

இந்திய ரூபாயை உலகுக்கு காட்டும் அடையாளம்



சர்வதேச அரங்கில் நாம் தன்னிறைவு பெற்று முன்னேறு கிறோம் என்பதற்குச்சான்றாக இதோ நம் நாட்டு பணமான ரூபாய்நோட்டுக்கும்  புதிய குறியீட்டை கண்டுபிடித்திருக்கிறோம்.இந்திய பணத்திற்கு ரூபாய் போன்று  அமெரிக்காவுக்கு டாலர், ஜப்பானுக்கு யென் மற்றும் யூரோ, இங்கிலாந்துக்கு பவுண்டு ஸ்டெர்லிங் ஆகியவற்றை இருக்க, எல், எஸ், ஒய் போன்று இந்தியா ரூபாய் மதிப்புக்கும் சர்வதேச அளவில் அனைவரும் புரிந்துகொள்ளும் படியாக ஒரு குறியீடாக ---ஆர்---(அடையாளச்சின்னம்) வடிவத்தை உருவாக்கியிருக்கிறார் உதயகுமார். சர்வதேச அளவில் நம் பணமதிப்பிற்கான குறியீட்டை உருவாக்கி நமக்கு பெருமை தேடித்தந்திருப்பவர் நம் தமிழகத்தைச்சேர்ந்தவர். அதுவும் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச்சேர்ந்தவர். தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியுள்ள ஐஐடியில் வடிவமைப்புத்துறை பேராசிரியராக பணியில் சேர்ந்த  கையோடு மத்திய அரசு நடத்திய ரூபாயக்கான குறியீட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக சென்னையில் தண்டையார்பேட்டையிலிருக்கும் அவரது வீட்டில் வைத்து சந்தித்தோம்.


*  வெற்றி எதிர்ப்பார்த்ததா? இந்த சந்தோஷம் எப்படியிருக்கு?
வார்த்தைகளில் சொல்ல முடியாத பரவசமாகியிருக்கு. இந்தவெற்றியை நான்  எதிர்ப்பாக்கலை. கடந்த வருடம் மார்ச் மாதம் போட்டிபத்தின அறிவிப்பு வெளியானதும் இதில நாமளும் பங்கெடுத்துக்கணும்னு முடி செய்ததும் இதற்கான வேலைகளை ஆரம்பிச்சேன். ரூபாய் மதிப்புக்கான அடையாளக்குறியை ப்பார்க்கும் போதெல்லாம் நம் தமிழ்நாட்டுக்காரர் செய்த டிசைன்ங்கறது ஞாபகம் வர்றது பெருமையானது தானே! இதை எப்படி வார்த்தையில  சொல்றது.

* இந்தஅடையாளத்தை உருவாக்கிய விதம் பத்தி சொல்லுங்க?
 கிட்டத்தட்ட நுõறு , நுõற்றைம்பது மாதிரிகள் வரைஞ்சு பார்த்தேன். நானே அதில பல படங்களை தவிர்த்திட்டேன். பலங்கால நாணயங்கள், எழுத்துக்கள்  மற்ற உலகநாடுகளோட ரூபாய் மதிப்பின் சிம்பள்கள்னு நிறைய விசயங்களை பார்த்து பார்த்து டிசைன் செய்தேன். அதில இந்தியில ஆர் ங்கிற எழுத்து ஒத்துவந்தது. இரண்டாவது விசயம் தேவநாகரி எழுத்தும் அதுக்கு ரொம்ப உபயோகமாக இருந்தது.தமிழ்  எழுத்துக்களை பொருத்தவரையோ, மற்ற மொழி எழுத்துக்களை பொருத்தவரையோ அடிக்கோட்டுக்கு மேலே தான் நாம எழுதுவோம். ஆனா, இந்தி எழுத்தை  பொருத்தவரை முதல் கோடுவரும் அதன் கீழே தான் எழுத்து வடிவத்தை கொண்டு வருவோம்.   அதில இடையில இன்னொரு கோட்டை சமம்ங்கிற மாதிரி நம்முடைய நாட்டின் பணமதிப்பும் மற்ற நாடுகளுக்கு ஈடாக வந்திடுச்சுங்கற மாதிரி ஈக்குவல் சிம்பளை அதில சேர்த்தேன். அது தேசியக்கொடிங்கற வடிவத்துக்கான அர்த்தத்தைக் கொடுத்தது.    இதுதவிர நான் ஓலைச்சுவடி எழுத்துக்கள், அச்சு எழுத்துக்கள் தற்போதைய எழுத்து வடிவம் வரை பிஎச்டி ஆய்வு செய்திருந்தேன் . அதுவும் எனக்கு உபயோகமாக இருந்தது.  நம்முடைய தேசிய மொழின்னு பார்த்தா இந்திதான் அதனால இந்தி எழுத்தை இந்த  வடிவத்துக்கு பயன்படுத்திக்க முடிஞ்சது. ஆண்ணா யுனிவர்சிடில ஆர்க்கிடெக்சரும், மும்பை ஐடிசி, ஐஐடில டிசைனிங் படிச்சதால இந்த எழுத்தை பொது இடங்களில் எப்படியெல்லாம் பயன்படுத்துவோம்னு பேங்க் , ரயில் டிக்கெட், மாத்திரை அட்டை இதில சிம்பலை பயன்படுத்தற விதத்தையும்  மாதிரியோட இணைச்சிருந்தேன்.

* மற்ற நான்கு போட்டியாளர்கள் வரைஞ்சிருந்தது?
அவங்க என்ன டிசைன் பண்ணியிருந்தாங்கன்னு நான் சொல்லக்கூடாது. ஆனா, அதில மூணு பேர் மும்பையைச் சேர்ந்தவங்க. ஒருத்தர் கேரளா, நான் தமிழ்நாடு. முதல்ல இந்தடிசைன் தேர்வானதும் முடிவு அறிவிச்சப்ப என்னை மும்பைக்காரர் வரைஞ்சிருந்த டிசைன் தேர்வாகியிருக்குன்னு சொல்லி பாராட்டினாங்க. அப்பறம் தான் எல்லோரும் என்னை பேட்டி எடுத்தப்ப தமிழ்நாட்டுக்காரர்னு தெரிஞ்சுக்கிட்டாங்க.  மும்பை மக்கள்  பார்க்கறவங்க எல்லாம் வாழ்த்து சொல்லி பாராட்டினாங்க.

*உங்களுடைய லட்சியம்?
ஆசிரியராக வேலைப்பார்த்து மாணவர்களுக்கு டிசைனிங் பத்தி சொல்லிக் கொடுக்கணும். என்கிட்ட படிச்ச மாணவர்கள்னு பேர் சொல்லணும். அதற்கு மாணரவ்களை தயார்படுத்தணும்.    

*உங்களைப்பற்றி?
 எங்களுக்கு சொந்தஊர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுõர் பக்கத்தில இருக்கிற மரூர். அப்பா தர்மலிங்கம் ரிஷிவந்தியூர் தொகுதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். எனக்கு இரண்டு சகோதரர்கள்   ராஜ்குமார், விஜயகுமார் தங்கை விஜயகுமாரி. தங்கைக்கு திருமணமாகிடுச்சு. 
நான் படிச்சது வளசரவாக்கத்தில லா சேட்லியர் ஜீனியர் கல்லுõரியில பிளஸ்2 வரைக்ம் படிச்சேன்.  பேச்சு, வாலிபால் விளையாட்டுல  படிக்கறப்ப நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். பிளஸ்2வுக்கு அப்பறம் அண்ணாபல்கலைக்கழகத்தில பிடெக்ல ஆர்க்கிடெக்சர் படிச்சேன். மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்தேன். அப்பறம் மும்பை ஐடிசி, ஐஐடியில டிசைனிங் படிச்சேன்.
-செல்வகுமார்

பெருகும் மனமுறிவுகள்! தொடரும் விவாகரத்துகள்!




            ஆண்,பெண்  இருவரையும் இணைக்கும்  திருமணங்கள்  சொர்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பார்கள் , ஆனால் குறைந்த பட்சம் ஏழு பொருத்தங்களாவது பார்த்து செய்து வைக்கப்படும் திருமணங்கள் முதலிரவிலேயே  இனிய இல்லறமாக மாறும் சூழலில், பலருக்கும் விடியும் பொழுது கோர்ட் படிகளை மிதிப்பதாகவே இருக்கிறது. பலவருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஏழு, எட்டு வருடங்கள் வாழ்ந்து பிடிக்காமல் இருவரும் சேர்ந்து  முடிவெடுத்து  பிரிந்த தம்பதிகளை சமுதாயம் தனக்கு ஒவ்வாத மனிதர்களாகவே பாவித்தது. ஆனால் , அதுவே இன்று ஒரு பேஷனாகி விட்டதாக தோற்றம் தருகிறது  என்றால் அதனுள் இருக்கிற சிக்கல்கள் தான் என்ன?
                                கடந்த ஆண்டு களில் 2005முதல்  2007 வரை வருடத்திற்கு  2650, 3000, 3250  வழக்குகள் முறையே  2008ல் அது இன்னும் அதிகமாகவே பதிவுசெய்யப் பட்டது என்கிற து சென்னை குடும்ப நல நீதிமன்றம்.அது இன்றைக்கு 3500 -த்தாண்டியிருக்கும்.  குழந்தைகள் விளையாட்டைப்போல சின்னச்சின்ன காரணங்களை சொல்லி விவாகரத்திற்கு நிற்கிறார்கள் இளம் வயது தம்பதிகள், தங்கள் குழந்தைகளோடு,டைவர்ஸ்க்கு காரணமாக சொல்லப்படுபவை அவளுக்கு சமைக்கத் தெரியவில்லை, அவள் கண்ணாடி போடுவது திருமணத்திற்கு பிறகே தெரிந்தது.முத்துப்போல்  பல்வரிசை  இல்லை. கை,கால்களில் முடி இருக்கிறது. வீட்டில் வற்புறுத்தியதால்  ஒப்புக் கொண்டேன், அவனுடைய பழக்க வழக்கங்கள் சரியில்லை, என்பெயர் சொல்லி கூப்பிடுகிறாள், பலர் முன் ‘டி’ போட்டுக் கூப்பிடுகிறான்.திருமணமாகி மூன்று மாதங்கள் கூட சேர்ந்து வாழமுடியவில்லை. மாமியார், நாத்தனார் தொல்லை என்று   நீளும்  பட்டியலே இருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் இவை வெறும் அற்பகாரணங்கள். ஆனால் , ஆழ் மனதில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதையே சுட்டிக் காட்டுகின்றன.இதனால் ,குழந்தைகள் தான் மனரீதியாக அதிகம் பாதிக்கப் படுகின்றனர் என்பதை பெற்றோர் உணரவேண்டும். 
                                   பெருகிவரும் விவாகரத்துகள்,மறுதிருமணங்கள்  குறித்து செகண்ட்ஷாதி டாட் காம். இணையதளம் மூலம்  ஒரு சர்வே நடத்தியது.  அதில்  
 எங்களுக்குள் பொருத்தமில்லை-4%, கணவனோ , மனைவியோ திடீரென இறப்பது -21%, பொறுமை இன்மை-36%, திருமணத்திற்கு முன் தவறான நடவடிக்கையும் , வெளித் தொடர்பும் -28%, குடும்ப கட்டுப்பாடு, நெறிமுறைக்கு ஒத்துப்போவதில்லை-4%,  வேலைமாற்றம்- 4%              
 இதில் இன்றைய இளசுகளின்  திருமண விருப்பங்களாக ..
  59% ஆண்களுக்கு சிகப்பு நிற பெண் அழகாகவும் , புத்திசாலியாகவும் இருக்கவேண்டும் என்றும் , 33% பெண்களுக்கு முக லட்சணமும், அதிகப்படியான  வசதிகளும் உள்ள ஆண்களையும்  பிடித்திருக்கிறது .88% ஆண்களுக்கு டிகிரி படித்தபெண்களாக இருப்பது நல்லது, ஆனால் தன்னை விட அதிகம் படித்திருக் கக்கூடாது , பி.எச்.டிபெண்களா ? வேண்டாம் என்கிறார்கள்.
விவாகரத்திற்கான காரணங்களுக்கும்,இளைஞர்களின் திருமண எதிர்பார்ப்புக்குமான முரண்பாடுகளுக்காகவே இந்த புள்ளிவிவர சதவிகிதங்கள்.
நாம் குடும்பநல நீதிமன்றங்களுக்குள் சுற்றி வந்தபோது பெற்றோர்களுடன்  பல இளம் பெண்கள் குடும்பநல ஆலோசணை மையத்தில் நின்றுகொண்டுஇருந்தார்கள்.அவர்களது குழந்தைகள் மிரட்சியான பார்வைகளோடு நின்றிருக்கிறார்கள்.அந்தமையத்தின் எதிரிலேயே இருக்கிறது குடும்பநல நீதிமன்றங்களின் குழந்தைகள் காப்பகம்.அங்கே குழந்தைகள் விளையாட பொருட்கள் நிறைந்து கிடக்கின்றன.
 வரிசையாக ஒவ்வொரு இளம் பெற்றோர்களும்  ஆலோனைக்கு ச் அழைக்கப்படுகிறார்கள்.குழந்தையை தன் அம்மாவிடம் விட்டுவிட்டு அவள் உள்ளே செல்ல ,உடன் சமரசம் செய்து வைக்க கணவனும் அழைக்கப்பட   அப்பாவை பார்த்த ஆவலில்  குழந்தை ஓட கண்டுகொள்ளாலேயே தட்டிவிட்டு கடந்து போகிறார் தந்தை.  ‘போய் அங்கே விளையாடு வர்றேன் ’என்று குழந்தையை துரத்திவிட அழுகிற குழந்தையை இழுத்துச்செல்கிறாள் பாட்டி.
அம்மாவுக்கும் , அப்பாவுக்கும் என்ன சண்டை ,என்ன பிரச்சினை என்று புரியாமலேயே  பார்க்கும்  குழந்தைகளுக்கு சிலசமயங்களில் ஏனோ அவர்கள் மீது விழுகிறது  அடிகள் கோபமாக. தான் பிறந்ததற்கான தண்டணையா? என்றுகூட புரிந்து கொள்ள முடியவில்லை குழந்தையால்.
நாம் சமரச மையத்திற்கு வந்திருந்த அம்முவிடம் பேசினோம்.திருமணமாகி மூன்று ஆண்டுகளில் இரண்டு குழந்தைகள். கணவனுடன் பிரச்சினை. எங்களுக்கு வீட்ல பொருத்தம் பார்த்து தான் கல்யாணம் பண்ணிவெச்சாங்க.அப்பறம் தான் பொய் சொல்லி ஏமாத்தினதே எங்களுக்கு தெரிஞ்சது. அவர் மனநிலை பாதிப்புள்ளவர்.சரி அமைஞ்சது வாழ்க்கை சரி பண்ணிக்கிடலாம் னு நானும் பொறுத்துப்பொறுத்துப்பார்த்தேன். முடியலை. நான் இப்போ  ஒரு வக்கீல் ஆபீஸ்ல அக்கவுண்டண்டா வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். ஒரு முறை 3500ரூபாய்கட்டுங்க  டைவர்ஸ் வாங்கிடலாம்னு சொல்றாங்க.ஆனா வாய்தா மேல வாய்தா வாங்கி இதுவரை பதினைஞ்சு ஆயிரம் செலவுபண்ணியிருக்கேன்.அந்த பணத்தை வெச்சு ஏதாவது தொழில் செய்ஞ்சிருந்தாலும் பிழைக்க உதவும்.(கண்ணீர் வடிகிறது). சரி இத்தனை நாள் வாழ்ந்தாச்சு அப்பிடியே வாழமுடியாததுக்கு என்ன காரணம்‘ அவரோட நெருக்கமான நண்பர் கூடச்சேர்த்து  என்னை சந்தேகப்பட்டு அவரும்,அவங்க குடும்பமும் பேசுது. ஆனா,பக்கவாதம் வந்து கிடந்தப்பவும்,மனநிலை பாதிக்கப்பட்ட சமயமும்
 நான் தான் கஷ்டப்பட்டு காப்பாத்தினேன்ங்கறதெல்லாம் அவர் மறந்திட்டாரு. ஒரு மனநிலை மருத்துவர்கிட்ட அவரை காட்டினப்ப தான் எனக்கு அவரை பத்தின எல்லா உண்மைகளும் தெரியவந்துச்சு. அவருடைய நெருங்கின நண்பர்கிட்ட கேட்டா  தெரியும்,யாரும் நல்ல காரியத்தை கெடுத்திடாதே , கல்யாணம் ஆனா சரியாகிடும்னு சொன்னாங்கன்னு சொன்னவர் மேல என்னை சேர்த்து  சந்தேகப்பட்டு பழிபோட்டு நண்பர்மேல கேஸ்போடவும் பெரிய பிரச்சினை ஆனது. ’ என்றார்.

அதேபோல இன்னொரு பெண்ணும் தனக்கு மாமியாருடன் ஒத்துப்போகவில்லை.எந்தநேரமும் படுக்கையறையில் இருக்கும் போது ஜன்னல் வழியாக ஒட்டுக் கேட்கிறார்.அதைவைத்து எனக்கும் என்கணவருக்கும் பிரச்சினை செய்து இன்று கோர்ட் படிகளை மிதிக்கும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டார்.அந்தளவுக்கு என்கணவர் சரியான அம்மாப்பிள்ளை என்கிறார்.கண்ணீர் மல்க.  தொடர்ந்தவர் ‘இங்கே விவாகரத்து வாங்கிட்டு பிரிஞ்சதும்  அடுத்த ஒரு வருஷத்தில  ஆம்பளைங்க  வேற பொண்ணுபார்த்து ,வரதட்சனை சீரோட கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கையை சந்தோஷமாக ஆரம்பிப்பாங்க,பெண்களுக்கு இன்னொரு கல்யாணம் ங்கறது இன்னைக்கு மாறிக்கிட்டு வர்ற காலகட்டத்தில சரியா ? ஆரோக்கியமா அமையுமா?மன ரீதியா எத்தனை பிரச்சினைகளை நாங்க சந்திக்கவேண்டியிருக்கும்’ என்கிறார்.

அவர்களது பெற்றோர்களிடம் ‘ அடுத்த தலைமுறை சந்திக்கிறீர்கள். நீங்கள் வாழ்ந்த காலத்து வாழ்க்கைக்கும் இன்று உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பிரச்சினைக்கும் என்ன காரணம் என்று உணர்ந்திருக்கிறீர்களா?என்றோம்  ’ அன்னைக்கு எங்களுக்கு என்னவானாலும் புருஷன் அவரை நம்பிவந்தாச்சு , கஷ்டமோ,நஷ்டமோ தலையெழுத்துன்னு சகிச்சுக்கிட்டு பிள்ளைங்களை வளர்க்கணும்னு  இருந்திட்டோம் .எவ்வளவோ நாத்தனார்,மாமியார் கொடுமை களை பாத்துட்டோம்.அப்போ என் புருஷன் அடிச்சாக்கூட ஏன்னு திருப்பி கேட்க மாட்டோம் .இன்னைக்கு உள்ள பிள்ளைங்க புருஷன் அடிச்சாக்க எப்பிடி அடிக்கலாம் னு எதிர்த்து பேசுதுங்க.சம்பாதிச்சு நாலு காசு பார்த்ததும் , புருஷன்கிறவன் சம்பாதிக்கறது  மட்டும் தானே.இவன் எப்பிடி நம்மளை அடிக்கலாம்ங்கற ,ஆத்திரம் ,கோபம் முன்னே வந்திருது.பொறுமையா போனா பிரச்சினை  இல்லை.அது  இங்கே யாருகிட்டயும் இல்லை ’. 

சரி, ஆண்கள் என்ன சொல்கிறார்கள் ராம்குமாரிடம் பேசினோம்‘ கல்யாணம் பண்ணி கொஞ்சநாள் கூட ஒத்துமையா வாழலைங்க. எப்பப்பாத்தாலும் போன்ல பேசிக்கிட்டே இருப்பா ,யாருகூடபேசறான்னு பார்த்தா , முன்னாள் காதலன்கூட. அதுவே பிரச்சினையாகி இப்போ இங்கே வர வேண்டியதாச்சு ,இப்போ , அவனோட தான் வாழ்வேங்கறா. எவ்வளவு செலவு பண்ணி கல்யாணம் பண்ணி என்ன சார்?’ என்கிறார் வேதனையாக.
காதலிலாவது பேசிப்புரிந்தகொள்ள வாய்ப்புகள் இருக்கும் . பெற்றோர் பார்த்து வைக்கிற திருமணங்களில் அதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.தவிர ,பெற்றோர் பார்க்கிற திருமணங்களில் குடும்ப நிர்பந்தங்களும், மிரட்டல்களும் அதிகம்.பாசத்திற்கு கட்டுப்பட்டு மனம் ஒப்பாமல் திருமணத்திற்கு தயாராகும் பலர் அதிலிருந்து மீள வழிதெரியாமல் சூழ்நிலைக் கைதிகளாய்  சிக்கிக் கொள்கிறார்கள்.
சமீபத்தில் காதலித்து  ஊர் சுற்றிய இளைஞன் பிறகு,அவள் வாயாடியாக  இருக்கிறாள் என்று  திருமணத்திற்கு மறுத்ததும் நடந்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் மற்றும் சம்பவங்கள்  மூலம்  பொறுமை இன்மையும் சத வீத அடிப்டையில் பாஸாகிவிட,
திருமணத்திற்கு முன்பான நடவடிக்கைகள் ரகசியமாக இருக்கவேண்டிய பட்சத்தில் (அ) நடந்த நிகழ்வுகளின் முடிந்து விட்ட பட்சத்தில்  திருமண இரவில் சத்திய பிரமாணமாக நிஜத்தை முழுமையாக சொல்லாதபட்சத்தில் அவசரத்தில்  பலர் மறுநாள் கோர்ட்வாசலை மிதிக்கின்றனர். இவர்களில் காதலர்கள் எண்ணிக் கை அதிகம் . அதற்கும் காரணம்  திருமணத்திற்கு முன்பாக புரிந்து கொள்ளும் வாழ்க்கைவேறு , அதற்கு பிறகான வாழ்க்கை வேறு என்பதாக இருக்கிறது.
  
இது குறித்து பிரபல குடும்பநல வழக்கறிஞர் கே.சுமதியை சந்தித்து பேசினோம்....
*ஒவ்வொரு ஆண்டும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கைஅதிகமாகி கொண்டிருக்கிறதே?
முதலில் ஒரு கணவன் அல்லது  மனைவி வழக்கைத் தாக்கல் செய்கிறபோது, ஒரு பதிவெண் கொடுக்கப் படுகிறது. அதுவே அவர்கள் மன ஒப்பந்தப்படி(மியூச்சுவல் டைவர்ஸ்க்கு) விண்ணப்பிக்கும் போது, மீண்டும் ஒரே வழக்கிற்கு வேறு எண் தரப்படுகிறது. அதனாலேயே இந்த  எண்ணிக்கை உயர்வு. 3500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்க அதில் 800 வழக்குகள் மறு பதிவெண் கொண்டதாக இருக்கும்.
*திருமணமாகி 60 ஆண்டுகளுக்குப்பின் பிள்ளைகளை செட்டில் செய்துவிட்டு ஒரு தாய் டைவர்ஸ்க்கு விண்ணப்பிக்கிறாள்?
பாட்டுக்கச்சேரி,டிவி, சமையல், சம்பாதித்தல் இவைகளில் உழைக்கும் விருப்பமும்,  தனக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்று தோன்றுகிறது. தான் ஏற்படுத்திக் கொண்ட குடும்ப கடமைகள் , குழந்தைகள் எதிர்காலத்திற்காக  சகித்துக் கொண்டு பிரியாத வர்கள். காலப்போக்கில் ஏற்படும்  மன அழுத்தத்தில் இருந்து மீளுவதற்காக,  முதிர்ந்த வயதில் டைவர்ஸ் கேட்கிறார்கள்.   இதை திமிர் , அறிவற்ற தன்மை என்று பேசுவதை விட்டு , பொறுமையோடு அணுக வேண்டும்.  இளம் வயது மனநிலை, கருத்துச் சுதந்திரம், தன் திருமணத்திற்கு முன்பான  தனது குடும்ப உறவு முறைகள், தொடர்ச்சி மாறி வரக்கூடிய குடும்ப  சூழலுக்கு ஏற்ப, நம் எண்ணங்கள்,கருத்துக்கள்  மாறி வருவது  தவிர்க்க முடியாத ஒன்று. அவர்களது  இடைவெளியை பேசி  சரி செய்யமுடியும்.

*ஆண்,பெண்ணிடையே சகிப்புத்தன்மை குறைவதை வழக்குகள் எண்ணிக்கை  காட்டுகின்றன இல்லையா?
ஒரு பெண் இன்றளவும் சமைக்கவேண்டும் , சாப்பாடு போட வேண்டும் , அவள் வேலை பார்ப்பவளாக இருந்தாலும்  கடமைகளில்  தவறக் கூடாது.இந்த எதிர்பார்ப்பு நடைமுறையில் பலசமயம் ஒத்துவருவதில்லை. இன்று சமையல் கற்கும் கால அவகாசம்  இளம் பெண்ணுக்கு  இல்லை. அவளும் படிக்கிறாள். அதே படிக்கிற ஆணுக்கு சமைப்பது, வீட்டு வேலைகள் பார்ப்பதும் அவசியமில்லை என்கிறோம். இன்றைக்கு  போட்டிகள் நிறைந்த வேகமான  வாழ்க் கை முறையை சந்திக்கிறாள் .  இதை அவளது  பிரச்சினைகளோடு பயணம் செய்யும் சம வயதினரால் மட்டுமே  புரிந்து கொள்ள முடியும்.
*இளம் வயதினர் டைவர்ஸ்க்கு நண்பர்களுடன் விவாதிப்பது ஆரோக்கியமானதா?
தலைமுறை இடைவெளி இல்லாமல் பேசக்கூடிய பெரியோர்களை  சந்திக்கும் போது,  தங்கள் பிரச்சினைகளை பேசி,விவாதிப்பார்கள். ஆனால், தான் சந்திக்காத போராட்ட சூழ்நிலையில் வாழநேரும்  இந்த  தலைமுறை தன்னுடைய பார்வையில் பார்க்க விரும்புமே தவிர,பெரியவர்கள்  பார்வை யில் பிரச்சினையை அணுக விரும்புவதில்லை.வற்புறுத்துவதால் விலகல்  ஏற்படுகிறது. மேலும் , விட்டுக் கொடு, பொறுமையாக இரு, என்று பெண் ணின் பெற்றோர் (ஆணின் பெற்றோரும்) அவளுக்கு அறிவுறுத்து போது,அவர்களுடன்   தன் பேச்சை நிறுத்திக் கொள்கிறாள். இதனால் நியாயமான அறிவுரை  கூட  அவளுக்கு 
கிடைப்பதில்லை.வேலை பார்க்கிற  ஆணுக்கு ஏற்படும் மன நெருக்கடி, பெண்ணுக்கு இருக்கக் கூடாதா?  அனுபவமற்ற சக நண்பர்களிடம்  பிரச்சினைகளை விவாதிக்கும் போது உணர்ச்சி  வசப்பட்டு மேலும் பிரச்சினைகள் வளரவே செய்யும்.  
*காதலர்கள்  அவசர திருமணம்செய்து , அவசர பிரிவுக்கும் முன் வருகிறார்கள் இல்லையா?
மீடியாக்கள் காதலைப்பற்றி  தவறான அர்த்தங்களை  விதைக்கிறது. பால் போன்ற இளைஞரின்  மனதை  திரியச் செய்கிறது.  காதல்ங்கறது வீட்டு வாடகை, அரிசி, பருப்பு,துணிமணிகள் , இன்றைய வாழ்க்கைக்கு வசதிகளை தேடும் முயற்சி, குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு பற்றி சொல்லித் தருவதில்லை. அகாலமாக  தம்பதியரில்  ஒருவர் இறந்தாலும், அந்த சூழலை சந்திப்பது  தவிர்க்க முடியாத ஒன்று , பிரச்சினை, இழப்பு, பொருளாதாரச் சிக்கல் என்று வரும்போது மன தைரியத்தோடு சந்திப்பது,   ஒருவரை ஒருவர் ரசித்து அவரவர்  நிறை, குறைகளை  ஏற்றுக்கொண்டு பழகும்போது  தான் காதல் வெற்றி பெறும் .
  *விவாகரத்துகள் மறுதிருமணங்களில் இப்போது எதிரொலிப்பதை பார்க்க முடிகிறதே? 
அவசரத் திருமணங்கள், அவசர பிரிவுகளின்  பக்குவமற்ற தன்மை,   இப்படி ஒரு ஆரோக்கியமற்ற வாழ்க்கை அதிக அனுபவங்களை கற்று தரும். வாழ்க்கையில் பொறுமை அவசியம் என்பதை காலம் உணர்த்தும்.  இக்கரைக்கு அக்கறை பச்சை இல்லை, என்பது போகபோகத்தான் புரியும்.அவரவரின் அந்தரங்க மனவலி அவரவரை சார்ந்தது. இதற்கு மிகுந்த மனோபலம் வேண்டும்.  குழந்தைகள் இருப்பின்  மனபாதிப்பு ஏற் படாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.  என்றார்.  
                 
திருமணங்கள் தம்பதிக்குள்  முதலில் உடல் நெருக்கம் காட்டி, பின்பே மனநெருக்கத்தை ஏற்படுத்துகிறது.ஆனால், காதலிப்பவர்களுக்கும் இப்படியான சூழலில் அதிக நெருக்கம் உண்மையான,ஆழமான  புரிதலை உண்டாக்குவதில்லை என்கிற  நிலையில், காதலர்கள் பிரியலாம். அப்பாவும், அம்மாவும் பிரியலாமா?அப்படி பிரிந்து  வேறொரு அப்பா,அம்மாவை இவர்கள் காட்டும் போது  அது என்னமாதிரியான விளைவுகளை குழந்தைகளின்  எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பதற்கு   காலம் தான் பதில்  சொல்ல முடியும் .
           ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ  விவாகரத்துக்குப்பிறகு  மறுதிருமணங்கள் செய்வதற்கு எங்கிருந்து துணிச்சல் இவர்களுக்கு வருகிறது என்று பார்க்கிற பொழுது, முதலில் தேவைக்கு அதிகமான பணம் தனக்கு கிடைப்பது. ஒரு ஆணை சார்ந்து வாழ்வது தேவையற்றது என்று நினைப்பது. அவனுக்கு வரதட்சனைதந்தும், சம்பாதிப்பதையும் கொடுத்தும், அம்மாவைப்போல நான் ஏன்அடிமையாக  இருக்கவேண்டும் என்று எண்ணுவதும். தனக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணமே . அதே நிலை ஆண்களிடமும் ஆணாதிக்க நிலையாக தொடர்கிறது. அப்பாவை மதிக்கும் அவளுக்கு அதே ஸ்தானத்தில் கணவணை வைக்க தோன்ற வில்லை.அம்மாவை மதிக்கும் ஆணுக்கு சக மனுஷியாக தாய்க்குப்பின் தாரம் தான் ,ஆதார ஸ்ருதி என்று தோன்றவில்லை. பெண்ணுக்கு பணம் தன்னிச்சையான தைரியத்தை  தந்து
விடுகிறது. மேலும் தன் கணவனுக்கு நிகரான சக நெருங்கிய ஆண் நண்பர்களும் இருக்கிறார்கள் என்கிற  துணிச்சல். தன் வீட்டில் அப்பா அம்மா  தருகிற அளவுக்கு அதிகமான சுதந்திரம் . 
                            

-விஜிசெல்வகுமார்    

Thursday, September 4, 2014

‘அரிதாரம் பூசி ய கதைகள் ’



கூத்துப்பட்டறை  நாடக்ககுழுவின் ‘ அர்ச்சுனன் தபசு’ நாடகத்தை பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது . சுதந்திரபோராட்ட காலத்தில் சிந்தனைகளால் மக்களை  ஈர்த்த தும் , பாதித்ததுமான நாடகங்களின் இடத்தை  இன்றைக்கு தொழில்நுட்ப மாற்றங்களால் வந்த  டிவி, சினிமாக்கள் ஆக்கிரமித்துக்  கொண்டன. ஆரம்பத்தில்  நாடக அரங்குகளில் அரிதாரம் பூசிக்கொண் டும் ,  இயக்கிக் கொண்டும் இருந்த  நடிகர்கள் ,படைப்புக் கலைஞர்கள்  லட்சம்,கோடிகளில்  சம்பளம் வாங்கவில்லை.  நாடக அரங்குகளில் மேடையேறும் கலைஞர்கள்  தன்னை வளர்த்துக் கொள்ள வசீகரிக்கும் வார்த்தைகளில் மக்களை மயக்கும் பஞ்சிங் டயலாக்குகள் பேசவில்லை.
  அவர்கள் படைப்புகளை ,வரலாற்று நிகழ்வுகளை காட்சிப்படுத்த தன்னை பிரதிபலிக்கும் உண்மை க் கலைஞனாக (கருவியாக) கருதினார்கள். இதிகாசங்களிலிருந்து  கதையை சொன்னார்கள். நாம் கூத்துப்பட்டறை  அரங்கத் திற்குள் நுழைய அங்கே நுõற்றுக்கும் குறைவான   பார்வையாளர்களோடு நாடகம் தொடங்கியது. அவர்கள் நடிப்பின் மூலமும்,
  தங்களது பேச்சின் மூலமாகவும்  சொல்கிற கதை நாம் கேட்டதாகவே இருந்தாலும், அவை நம் மனதுக்குள் வேறுபட்ட புதிய  சிந்தனைகளை ஒவ்வொரு காட்சியிலும் தோற்றுவிக்கிறது.
உலக நாடுகளில் போருக்காக அணுஆயுதங்களின் கண்டுபிடிப்பும், அதற்காக ராணுவ தளவாடங்களை, அதிநவீன போர்க் கருவிகளை வாங்கி குவிப்பதிலும்  பெருமளவு நிதிஒதுக்குகிற நிலையில் ,போர்களால்   பலாயிரம்  மக்கள் கொன்று குவிக்கப் படுகிற நிலையில்  ‘அர்ச்சுனன் தபசு’ என்கிற இந்த நாடகம் ‘ பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தால் துரியோதனனிடம்  நாடிழந்து,  திரௌபதியுடன் வனவாசம் சென்ற நிலையில்,வியாசமாமுனி அவர்களை  சந்திக்கிறார். வியாசரின் சொல்படி அர்ச்சுனன்  இமயத்தில்  தவமிருக்கிறான்.அங்கே வரும் ஏகலைவன் சீடர்கள்  சிவனிடம்   உள்ள  மூவுலகை அழிக்கும் பசுபதாஸ்ரத்தை வாங்கி  யாருக்கும்  பயன் படாமல்  கிடப்பில்  போடுவதாக கூறி,அர்ச்சுனனுக்கு தரக்கூடாது என்று தடுக்கின்றனர். முடிவில்  பசுபதாஸ்திரத்தை அர்ச்சுனன்  எப்படி  பெறுகிறான் என்பதே  கதை. மக்கள் சமாதானமாக  வாழ போர்களே கூடாது என்றாலும்  மண் ,பெண் ஆசையால் தீமை செய்யும் குணம் கொண்டோரை அழிக்க நினைக்கும்  ஒவ்வொருவரின் செய லும் ,கைகலப்பில்  முடிகிற நிலையில் வன்முறைகள், கொலைகள்  போரில் தவிர்க்க முடியாத தர்மம் என்பதையே அர்ச்சுனன் தபசுவும் காட்டுகிறது. ‘கூத்துப் பட்டறை’ யின் அமைப்பாளரும் ,நாடக ஆசிரியருமான ந.முத்துச்சாமி.  இந்நாடகத்தை  எழுதி,இயக்கியிருக்கிறார். அதில் நடித்தவர்களிடம் பேசினோம்.
பொதுவாகவே தனிப்பட்ட முறையில், குறிப்பிட்ட பாத்திரத்தை ஏற்று யாரும் நடிக்க வில்லை என்றாலும் ,எல்லா கதாபாத்திரங்களையும் கலந்தே நடிக்கிறார்கள்,பயிற்சி செய்கிறார்கள் . ஒரே நபர் வெவ்வேறு பாத்திரங்களில் மாறி, மாறி நடிப்பதால் , பல்வேறு பாவனைகளை கொண்டு வரமுடிகிறது என்கின்றனர்.பார்வையாளர்கள் நடிகர்களை மறந்துவிட்டு கதையுடன் ஒன்றிவிட வேண்டி இருக்கிறது. நடிக்கும் கலைஞர்களுக்கு  படிப்பு ஒரு தகுதியில்லை என்றாலும் ,இவர்கள் அனைவருமே பட்டப்படிப்பையும் ,இன்ஜினியரிங் படிப்பையும்  முடித்துவிட்டு கூத்துப்பட்டறையின் மேல் உள்ள ஆர்வத்தில்  நடிப்பை கற்றுக்கொள்ள வந்திருப்பவர்கள்.   அதில் வினோதினி  எம்பிஏ படித்தவர்,ஸ்ரீதேவி வேலுõரை சேர்ந்தவர் ,வீதி நாடகங்களில் நடித்தவர். தஞ்சாவூர்காரரான சாந்தகுமார் எம்பிஏ பட்டதாரி, பெரியதம்பி என்கி ற சஞ்சீவி எம்,ஏ படித்த பட்டுக்கோட்டைக்காரர், பிஇ படித்த பாபுவோ கர்நாடகத்துக்காரர்,  விஜயனுக்கு திண்டிவனம் , ஜி.ராமகிருஷ்ணன் டிப்ளமோ பிலிம் டெக்னாலஜி படித்தவர், பாபிக்கு இது முதல் நாடகம். இவர்களில்  பாண்டிச்சேரியிலிருந்து வந்திருக்கும் ருத்ரா மட்டும் தான் பத்தாம்வகுப்பு படித்தவர் மற்றும் தம்பிசோழன் ,வடிவேலு என பலரும்  நடிப்பை நம்பி  வந்திருப்பவர்கள்.அனைவருமே பலவருடங்களாக நடித்து வருபவர்கள். கூத்துப்பட்டறையிலிருந்து நடிப்பைக் கற்றுக் கொண்டு இன்றைக்கு சினிமாவில் பிரபலமாகியிருப்பவர்கள் நடிகர் பசுபதியும்,நடிகை கலைராணியும்.    இன்று  நடிப்பு பயில தனியாக பாடத்திட்டமும், திரைப்பட கல்லுõரியில் அதற்கென்று இருந்த பட்டப்படிப்பும்  நின்றுவிட்ட சூழ்நிலையில் ,   முதலில் சினிமா ஆர்வத்திலும்,  ஸ்டார் ஆசையிலும்  சென்னை வந்தவர்களுக்கு, கூத்துப்பட்டறை ஒரு நல்ல பழ்கலைக்கூடமாக திகழ்கிறது.இங்கே ஒவ்வொரு நிமிடமும் நிறைய கற்றுக்கொள்கிறோம் . என்கின்றனர் உற்சாகமாக . கூத்துப்பட்டறை கலைஞர்களின்   நாடகமுயற்சிகள்  இந்திய  அளவில்  மொழிகள் கடந்து  பலரது கவனத்தை பெற்றிருப்பதோடு,பேசவும்படுகிறது. இப்போதைக்கு  மத்திய அரசு தரும் மாதஊதியம் தான்  இவர்களுக்கான ஊக்கம்.  மேலும் , டிவி நிறுவனங்கள் இவர்களை மக்களிடம் கொண்டு சேர்த்தால்,இன்னும்  மக்கள் கூடுகிற பெரிய அரங்கத்தில் மேடை ஏற்ற முடியும் என்கின்றனர்.தங்களுக்கு  மாநில அரசு ஏதாவது  செய்யும் என்று நம்புகிறார்கள் இந்த கலைஞர்கள்.  மக்களை சிந்திக்கவும் ,அவர்களுக்கான பொழுதுபோக்கவும் நவரச நடிப்பை பாவனையாக்கித்தரும் இவர்களுக்கு மக்கள் மற்றும் அரசின் நம்பிக்கைகள் பாவனையாகி  விடாமல் உண்மையான  நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நம் பிரார்தனைகள்?....
விஜிசெல்வகுமார்